தொழில் வழங்குமாறு கோரி அரசை வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகள் இரண்டாவது நாளாகவும் நேற்றையதினம் (18) நாடாளுமன்றத்துக்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆர்ப்பாட்டம் நடந்த இடத்துக்கு விஜயம் செய்துள்ளார்.
கடந்த தேர்தல் காலப் பிரிவில் வேலை வழங்குவதாக தற்போதைய அரசு வாக்குறுதியளித்தது. எனினும், இதுவரை குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
இதனால் தாம் உட்பட கிட்டத்தட்ட 40 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகள் கைவிடப்பட்டுள்ளனர் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.

இங்கு கெருத்து தெரிவித்த அவர்,
“இதற்கு முன்னரும் பல தடவைகள் இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன். இருந்த போதும் அரசிடம் இருந்தும், பொறுப்பான தரப்பினரிடம் இருந்தும் இதற்கான எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
“பட்டதாரிகள் தொடர்பான பிரச்சினைக்குப் பதிலைப் பெற்றுத் தருமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
அரசு வழங்கும் பதிலைப் பார்ப்போம். இதற்கு என்ன பதில் சொல்வார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். தற்போதைய அரசின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமது முதலாவது வரவு – செலவுத் திட்டத்தில் இந்த வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவோம் என்றும் இந்த அரச தரப்பினர் பிரஸ்தாபித்திருந்தனர். ஆனால், இதுவரையில் இது தொடர்பில் தீர்வு காணப்படவில்லை.
வேலையில்லாப் பட்டதாரிகள் பக்கம் நான் முன்பும் இருந்தேன். இன்றும் இருக்கின்றேன். நாளையும் இருப்பேன்.
இந்தப் போராட்டத்தை அமைதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் முன்னெடுங்கள். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் தேவையான சகல ஆதரவையும் வழங்குவேன். என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளார்.