“தமீழீழ விடுதலை புலிகள் இயக்கத்திலிருந்து நாங்கள் பிரிந்தவர்கள் என்பதை விட நாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டோம் என்றுதான் கூறவேண்டும்” இவ்வாறு கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் தமீழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண கட்டளை தளபதி விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மற்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்னும் பிள்ளையான், வியாழேந்திரனுடைய புதிய கூட்டணியில் இணைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த போதே மேற்கண்டவாரு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் ஒதுக்கிவைக்கப்பட்டபோது நான் ஒரு முடிவை எடுத்தேன். எங்களுடைய கிழக்கு மாகாண இளைஞர்கள் மற்றும் மக்களின் உயிர்களை பாதுகாக்கவேண்டும் என்ற அடிப்படியில் அன்று எங்களுடன் கைகோர்த்து நின்ற பிள்ளையான், ஜெயம், மறைந்த குகனேசன் மற்றும் இன்னும் பல தளபதிகள் ஆகியோருடன் ஆலோசித்தோம்.
அந்த கலந்துரையாடலின் பின்னர் அனைவரும் எங்களுடன் அணிதிரண்டு வந்தார்கள். ஏன் என்றால் நிச்சயமாக இளைஞர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்க்காக.
அதன் பின் நானும் பிள்ளையானும் பல துன்பங்களை சந்தித்திருந்தோம். ஏன் என்றால் விடுதலை புலிகள் இயக்கத்தை எதிர்த்து நின்று வெற்றி அடைந்தவர்கள் நாங்கள் மட்டும்தான். அன்று அந்த தலைமைத்துவத்தின் தவறான முடிவால் தான் நாங்கள் அங்கிருந்து வெளியிறியிருந்தோம் என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

சதேசமயம் இவர்களுடைய இந்த இணைவு குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அதில் குறிப்பிடப்பட்ட விடயம் என்னவென்றால், இந்த மூவருமே மக்களால் நிராகரிக்கப்பட்டு, மக்களால் துரோகிகள் என அடையாளம் காணப்பட்டவர்கள், இப்படிப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்திருப்பது என்பது ஒருபோதும் நல்ல விடயத்தை கொண்டு வராது என்றும் அவ்வாறான விமர்சனங்கள் தெரிவிக்கின்றது.