கிழக்கில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கிரான் அருள்மிகு மஹாகாளி அம்பாள் ஆலயத்தின் ஜீரணோத்தாரண நவகுண்டபட்ஷ அஷ்டாந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக நிகழ்வு வெகு சிறப்பாக கடந்த (19) நடைபெற்றது.
ஸ்ரீ தெட்சிணகைலாயம் எனப் போற்றப்படுவதும், பஞ்ச ஈச்சர சிவத்தலங்களை தன்னகத்தே கொண்டதும், இந்து மஹா சமூத்திரத்தின் முத்தாக மிளிர்வதுமான இவ் இலங்காபுரியின் கீழ்க் கரையிலே இயற்கை எழில் கொஞ்சும் கிழக்கிலங்கையின் தலை நகரமானதும், சைவமும் தமிழும் தழைத்தோங்கவதுமான மட்டக்களப்பு நகரின் வடபால் கிரான் பதியிலே அமைந்து வேண்டுவோர்க்கு வேண்டுவன பாலிக்கும் அன்னை மஹா காளி அம்பாளுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் நிகழும் சர்வ மங்களகரமான குரோதி வருஷம் மஹா கும்பாபிஷேகம் இடம்பெற்றது.

பக்தர்களின் ஆரோகரா கோஷத்துடன் ‘ரோன்’ கருவியின் உதவியுடன் வானில் இருந்து வண்ண மலர்கள் சொரிய மங்கள மேள வாத்தியத்தின் இசை முழங்க கும்பாபிஷேக குருமார்களின் வேதபாரயனங்களுடன், மஹாகும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது.
முதல் நாள் நிகழ்வாக (17) திங்கள் கிழமையன்று சாந்தி பூஜைகள்,கணபதி வழிபாடு,கிராம சாந்தி பூஜைகள் என்பன நடைபெற்றன.
(18) செவ்வாய் கிழமையன்று பக்தர்கள் எண்ணைக்காப்பு சாத்துதல் நிகழ்வு நடைபெற்று (19) திகதி அன்று புதன் கிழமை மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஆலயத்தின் அனைத்து பூஜை நிகழ்வுகளும் கும்பாபிஷேக பிரதிஷ்டா பிரதமகுரு யாழ்ப்பாண சமஸ்தானம், நல்லூர் தேவஸ்தாபன பாரம்பரிய சிவச்சாரியார்பரம்பரை, ஸ்ரீ ருத்ர பிரதிஷ்டாதிலகம், யஜீர்வேதி ஜோதிட சிம்மம் சிவஸ்ரீ ராம சோமாஸ்கந்த சிவச்சாரியார் தலைமயில் நாட்டின் பல்வேறு ஆலயங்களில் இருந்து வருகை தந்த குருமார்களும் நிகழ்வில் பங்குபற்றி கும்பாபிஷேக நிகழ்வினை சிறப்பாக நடாத்தியிருந்தனர்.
நிகழ்வின் இறுதியில் ஆலயத்தின் வளர்சிக்காக பல்வேறு வகையிலும் ஒத்துழைப்பு வழங்கியவர்களக்கு ஆலய நிர்வாகத்தினரால் அன்பளிப்பு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த கும்பாபிஷேக நிகழ்வினை கிரான் பிரதேச பொதுமக்கள், ஆலய நிர்வாகம் மற்றும் மாதர் சங்கம் என்பன ஒன்றிணைந்து நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






















