அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணொருவர் தனது மகனை கழுத்தறுத்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெர்ஜினியா மாகாணத்தில் சரிதா ராமராஜு (48) என்ற பெண், தனது கணவரை விவாகரத்து செய்ததால் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
அவரது முன்னாள் கணவர் பிரகாஷ் ராஜு என்பவர், 11 வயது மகனான எதின் ராமராஜு உடன் கலிபோர்னியாவில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் மகனை தன்னுடன் அழைத்துச் சென்ற சரிதா, பேர்பெக்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் தங்க வைத்துள்ளார்.

அதற்கமைய, மூன்று நாட்கள் மட்டுமே மகன் தன்னுடன் இருக்க முடியும் என்ற நிலையில், கடந்த 18ஆம் திகதி டிஸ்னிலேண்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்குள்ள ஒரு ஹொட்டலில் இருவரும் தங்கியிருந்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட காலம் முடிந்து மறுநாள் கணவரிடம் மகனை ஒப்படைக்க வேண்டும் என்ற நிலையில், அவர் தனது மகனின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
பின்னர் அவர் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார். அதே சமயம், பொலிஸாருக்கும் தொலைபேசி அழைப்பை செய்து நடந்தவற்றை கூறியுள்ளார்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலமாக கிடந்த சிறுவனை மீட்டுள்ளனர். மேலும், மயங்கிய நிலையில் இருந்த குறித்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைக்கு பின்னர் அவரை கைது செய்துள்ளனர்.