இலங்கை – இந்திய மீனவர் விவகாரம் தொடர்பில் இந்திய மீனவர் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் பின்னர் இளங்குமரன் எம்.பி. ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையில்,
இலங்கைக்கு வந்துள்ள இந்திய மீனவர் சங்கப் பிரதிநிதிகள் மீனவர் பிரச்சினை தொடர்பில் என்னைச் சந்தித்து கலந்துரையாடி இருந்தனர்.
இந்தச் சந்திப்பில் இழுவைமடித் தொழிலை தாங்கள் கைவிடுவதாக எம்மிடம் கூறியிருக்கின்றார்கள். இது அவர்கள் எமக்குக் காட்டிய நல்லெண்ண சமிக்ஞையாக நாங்கள் பார்க்கின்றோம்.

அதற்கான நடைமுறைச் செயற்பாடுகள் தொடர்பிலும் இங்கு ஆராய்ந்துள்ளனர். அவர்கள் இழுவைமடித் தொழிலைக் கைவிட்டால் அவர்களுக்கான மாற்றுத் தொழில் ஏற்பாடுகளை அந்த நாட்டு அரசு செய்ய வேண்டும்.
குறிப்பாக இந்த இழுவைமடித் தொழிலாளர்கள் அந்த நாட்டு அரசிடம் கடலட்டைப் பண்ணை வைப்பதற்கு அனுமதி கேட்டுள்ளனர். உண்மையில் அவர்களது இந்த மாற்று முயற்சி நியாயமானது.
அவர்கள் சொல்வது போன்று இழுவைமடித் தொழிலை அவர்களாகவே நிறுத்தத் தீர்மானித்துள்ளமை நல்ல விடயம் என்றார்.