தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் தொடர்பாக, தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்ன (TGM) அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
அதில், எதிர்வரும் மே 18ஆம் திகதியன்று, ஒட்டாவாவில் உள்ள தமிழ் அமைப்புகள், தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை பிரெட் ஜி. பாரெட் அரினா – மண்டபத்தில் மாலை 6 மணிக்கு நினைவுகூர திட்டமிட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் வட கரோலினாவில் உள்ள தமிழ் அமைப்புகள், கேரி, NCஇல் தமிழ் இனப்படுகொலை நினைவு தின நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளன.
மேலும் FeTNA தமிழ் இனப்படுகொலை நினைவு தின நிகழ்வை இணையவழியாக இரவு 9 மணிக்கு நடத்த திட்டமிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில், கனடா நாடாளுமன்றம் இலங்கையில் தமிழர்களின் இனப்படுகொலையை அங்கீகரித்து, ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அறிவித்தது.

இதனையடுத்து 2023 மே 18 அன்று, கனடா பிரதமர் முதல் தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை அறிவித்தார்.
இந்தநிலையில் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குற்றங்களுக்காக இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து கோரி வருகின்றனர்.
இதேவேளை ஒன்டாரியோ அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட “தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்டம்”, ஒவ்வொரு ஆண்டும் மே 18 அன்று முடிவடையும் ஏழு நாள் காலத்தை தமிழ் இனப்படுகொலை கல்வி வாரமாக அறிவித்துள்ளது.
இதேவேளை இந்த செயற்பாடுகள், தமிழ் இனப்படுகொலையால் இழந்த உயிர்களை கௌரவிப்பதுடன் மட்டுமல்லாமல், வாழ்நாள் முழுவதும் தலைமுறை தலைமுறையாக அதிர்ச்சியடைந்தவர்களுக்கு நம்பிக்கையையும் அளிக்கிறது.
அத்துடன் ஆற்றுப்படுத்தல் மற்றும் நல்லிணக்கத்திற்கான முதல் படியைக் குறிக்கிறது என்றும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்ன (TGM) அமைப்பு தெரிவித்துள்ளது.