கடந்த காலங்களில் சரியான வகையில் விசாரணைகளை மேற்கொள்ளாமல் விடுதலை செய்யப்பட்ட அரசியல் வாதிகள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் சில நபர்களுக்கு எதிராகவும் மிகவிரைவில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றதுடன், இந்த நாட்டில் இடம்பெற்ற எல்லாவிதமான குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம் நேற்று சனிக்ககிழமை (29) பழைய கச்சேரி மண்டபத்தில் பிரதி அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் யாரையும் அரசியல் ரீதியாக பழிவாங்கவில்லை. இதற்கு முதலிலே அரசியல் ரீதியாக பல்வேறு பட்ட அரசியல்வாதிகள் பழிவாங்கப்பட்ட வரலாறு இருக்கின்றது. 1950 ,60,70,80, 90, 2 ஆயிரத்துக்கு பிற்பட்ட காலமாக இருக்கலாம் இப்படிப்பட்ட பல்வேறு விடயங்கள் நாட்டிலே நடந்திருக்கின்றது.

1977 ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம், பொலிஸ் திணைக்களத்துக்கு ஒரு விடுமுறையை வழங்கி மக்களுக்கும் எதிர்கட்சிக்கும் சிறுபான்மைக்கும் எதிராக வன்முறையை கட்டவிழ்துவிட்டது அப்படிப்பட்ட நாட்டிலே நாங்கள் வாழுகின்றோம்.
எனவே நாங்கள் பழிவாங்கும் செயற்பாடுகளுடன் செயற்பட்டிருந்தோம் என்றால் எவ்வளவே வேலையை செய்திருக்கலாம். ஆனால் நாங்கள் சட்டரீதியாக ஒப்புவிக்கப்படுவதன் பிரகாரம் நாங்கள் அவர்களுக்கு எதிராக சரியான முறையில் சட்ட நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.
பட்டலந்தை ஆணைக்குழு தொடர்பான விவாதம் இப்போதாவது வெளி வந்தது என்பது சந்தோஷமானது. சம்பவம் துக்கமான விடயமாக இருந்தாலும் அரசியல் ரீதியாக இப்போது பெரும் விவாதமாக எடுக்கப்படுகின்றது.
இந்த நாட்டில் மக்கள் விடுதலை முன்னணிக்கு நடந்தது என்று பார்பதை விட இது ஒரு உதாரணம். இந்த நாட்டில் சட்டவிரோதமான படுகொலைகள் அரச ஒடுக்கு முறைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் இருந்தது என சொல்வதற்கான ஒரு உதாரணம் இது-என்றார்.