நித்தியானந்தா இறந்துவிட்டதாக அவரது சகோதரி மகன் தகவல் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் நித்தியானந்தா. கர்நாடகா, பிடதியில் ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வந்தார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை நிறுவினார்.
பின் நடிகை ஒருவருடன் தனிமையில் இருந்ததாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலிருந்து பெண் சீடர்களைத் தவறாக நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் பெங்களூரில் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடப்பட்ட நிலையில், தலைமறைவானார்.

அதனையடுத்து திடீரென கைலாசா என்ற தனித் தீவை உருவாக்கியிருப்பதாக அறிவித்தார். அது இந்துக்களுக்கான நாடு, தனி கரன்சி, பாஸ்போர்ட், கொடி ஆகியவற்றை உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, தமிழக மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து 5 ஆண்டுகளாக சிறிது அமைதியாக இருந்த நித்தியானந்தா, டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதாகவும், சுயநினைவின்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது. ஆனால் சில நாட்களில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.
இந்நிலையில், நித்தியானந்தா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவரது சகோதரி மகன் சுந்தரேஸ்வரன், இந்து தர்மத்தைக் காக்க நித்தியானந்தா உயிர் தியாகம் செய்துவிட்டதாக வீடியோவில் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தத் தகவல்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.