கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி என்ற பெண் நீண்ட நாட்களாக தலைமறைவாகியுள்ள நிலையில் அனுராதபுரம் நகரிலுள்ள ஹோட்டலில் தங்கியிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
விரைந்து செயற்பட்ட பொலிஸார் அவரை கைது செய்யும் நோக்கில் நடத்திய சோதனையில், அவரைப் போலவே தோற்றமளிக்கும் பெண் மற்றும் முன்னாள் இராணுவ மேஜர் ஆகியோர் 3.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐஸ், குஷ் மற்றும் கேரள கஞ்சா மற்றும் இரண்டு சொகுசு கார்களுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் குருநாகல், உடவல வீதியைச் சேர்ந்த 53 வயதுடைய முன்னாள் இராணுவ மேஜர் மற்றும் 33 வயதுடைய பெண் ஆகியோர் என தெரியவந்துள்ளது.
அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி நுவான் விக்ரமசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் குழு இந்த சோதனையை மேற்கொண்டது.
இந்த சோதனையில் உதவுவதற்காக பொலிஸ் மோப்ப நாய் பிரிவும் ஈடுபடுத்தப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேக நபரான முன்னாள் மேஜரும் செவ்வந்தி பெயரை கொண்ட பெண்ணும் தகாத உறவைப் பேணி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.

முன்னாள் மேஜர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் அனுராதபுரத்தில் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாக்கப்படவுள்ளனர்.
அதேசமயம் சந்தேக நபரை கைது செய்வதற்கு துல்லியமான தகவல் வழங்குபவருக்கு 12 இலட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.
தகவல்களை வழங்கக்கூடிய தொலைபேசி இலக்கங்கள்:
பணிப்பாளர், கொழும்பு குற்றப்பிரிவு – 071-8591727
நிலைய பொறுப்பதிகாரி, கொழும்பு குற்றப்பிரிவு – 071-8591735
மேலும், தகவல் வழங்குபவர்களின் இரகசியத்தன்மையை பாதுகாக்க இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படுகொலை தொடர்பாக கொழும்பு குற்றப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது