ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹவின் இந்திய விஜயத்தின் போது சில ஒப்பந்தங்களும், பல்வேறுபட்ட
இந்திய-இலங்கை உறவு, முதலீடு, மற்றும் அபிவிருத்திசார் விடயங்களும் கலந்துரையாடப்பட்டன. அதில் திருகோணமலைத் துறைமுகத்தை மையப்படுத்திய அபிவிருத்தி என்பதைத்தாண்டி, மேலோட்டமாக
குறிப்பிடப்பட்டிருந்த இரண்டு விடயங்கள் கவனத்தை ஈர்ப்பதாக அமைகிறது. ஒன்று, தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தையும், இலங்கையின் காங்கேசன்துறையையும் இணைக்கும் படகுச்சேவையை
ஆரம்பித்தல், மற்றையது இலங்கைக்கும், இந்தியாவிற்குமிடையிலான தரைவழி, மற்றும் ரயில் பாலம் ஒன்றை அமைத்தல். இந்த இரண்டும் இலங்கையின் வடக்கின்தலையெழுத்தையே மாற்றியமைக்கவல்லன.
இந்தப் பாலம் அமைப்பது பற்றிய முன்மொழிவு பேச்சளவில் இருக்கும் போதே, அதுவும் இதற்கு பெரிதாக
முக்கியத்துவம் ஊடகங்களால் வழங்கப்படாதபோதே, இது அரசியல் ரீதியிலான பேசு பொருளாக
மாறியிருக்கிறது.தென்னிந்தியாவிற்கும் இலங்கையின்வடக்கிற்கும் இடையில் படகுச் சேவையைத்
தொடங்குவது மற்றும் தரைப்பாலம் மற்றும் ரயில் பாலம் இரண்டையும் நிர்மாணிப்பது
போன்ற உட்கட்டமைப்புகள் பொருளாதார வளர்ச்சி, கலாசார பரிமாற்றம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை
மேம்படுத்தி இலங்கையின் வடபகுதிக்கு நன்மையளிக்கும் என்பது இந்தத்திட்டத்திற்கு ஆதரவான கருத்துக்கள். எவ்வாறாயினும், இந்த லட்சிய முயற்சியானது, பாதுகாப்பு, வள ஒதுக்கீடு, பிராந்திய தகராறுகள், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பூகோள அரசியல் ஆகியவற்றின்மீது ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பிலான கவலைகள் காரணமாக, தெற்கில் இருந்து, குறிப்பாக அரசியல் ரீதியாகசாத்தியமான எதிர்ப்பை எதிர்பார்க்கலாம்.ஆனால் இந்தத் திட்டம் நிறைவேறினால்,
அது இலங்கையின் வடக்கின் போருளாதார நிலையை இந்தத் திட்டம் நிறைவேறிய இரண்டு தசாப்தங்களுக்குள் மாற்றியமைக்கும் என்பது திண்ணம். இன்று பொருளாதார ரீதியில் இலங்கையின் மிகப் பின்தங்கிய மாவட்டமான வடக்கு, இதனால் பெரும்பலனடையும். படகு சேவை மற்றும் பாலங்கள் இலங்கையின்வடபகுதிக்கு பரந்த இந்திய சந்தைக்கு மேம்பட்ட அணுகலை வழங்கும். இந்த
மேம்படுத்தப்பட்ட இணைப்பு வர்த்தகத்தை அதிகரிக்கும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் மற்றும் பிராந்தியத்தின் பொருளாதாரத்தை பல்வகைப்படுத்தும் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை.
இலங்கையின் வடக்கில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும். இது வடக்கோடு நின்றுவிடாது, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் சுற்றுலாத்துறைக்கும் பயனளிக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை விருந்தோம்பல் மற்றும் சேவைத் துறைகளில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, சுற்றுலாத்துறையில் பின்னணியிலிருக்கும் வடக்கை, முன்னணிக்குக் கொண்டுவரும்.
குறிப்பாக வரலாற்று, மத ரீதியிலான சுற்றுலாக்களுக்கான கேள்வியை இது அதிகரிக்கும். இந்தியாவிற்கும்,
இலங்கையில் வடக்கு, வடமத்திய, மற்றும் கிழக்குக்கு இடையிலான மத ரீதியான, வரலாற்று ரீதியிலான தொடர்புகள் இந்த சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு அடிப்படையாகும். தரைவழி, மற்றும் படகுவழி இணைப்பு ஏற்படும்போது, அது இந்திய சந்தைக்கு இலங்கையின் வடக்கு, வடமத்திய, மற்றும் கிழக்கைஅணுகுவதற்கு இலகுவானதாக மாற்றுகிறது. பாலங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு கட்டுமானம் பிராந்திய வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும். வர்த்தகம், சுற்றுலா
எல்லாம் அதிகரிக்க, அதன் தேவையைச் சமாளிக்கவென, மேம்படுத்தப்பட்ட வீதிகள், புகையிரத சேவைகள், மற்றும் துறைமுக வசதிகள், மின்சாரம், குடிநீர், தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு வசதிகள் என இலங்கையின் வடபகுதிக்கு அதிக வணிகங்களையும் முதலீட்டாளர்களையும் இது ஈர்ப்பதாக அமையும். மேம்படுத்தப்பட்ட இணைப்பு தென்னிந்தியாவிற்கும் இலங்கையின் வடக்கிற்கும் இடையே கலாசார பரிமாற்றம், புரிதல் மற்றும் பரஸ்பர மரியாதையை வளர்க்கும்.
இது இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும். இந்தத்திட்டத்தில் பங்குதாரராக இந்தியாவிற்கு உள்ள முக்கிய பலன்களில் இதுவுமொன்று. இலங்கையின் வடக்கில் இந்தியா வேரூன்ற இது வழிசமைக்கும். வடக்கின் பொருளாதார மேம்பாடு என்பது, வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும், வடக்கின் தலையெழுத்தை மாற்றும் ஒரு நடவடிக்கையாக அமையும்.ஆனால், வடக்கில் இந்தியா
வேரூன்றுவதுதான், தெற்கு இதனை சந்தேகத்துடனும், அச்சத்துடனும் அணுகுவதற்கும் காரணமாக அமையும். தரை மற்றும் புகையிரத பாலங்களை நிர்மாணிப்பது இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாடு பற்றிய கவலைகளை மீண்டும் தூண்டலாம், இறையாண்மையில் ஊடுருவல் ஏற்படக்கூடும் என்ற அச்சம் தெற்கில் கட்டாயம் எதிரொலிக்கும். இந்தத் திட்டத்தை இலங்கையின் இறையாண்மைக்கு சமரசம் செய்வதாக சித்தரித்து அரசியல் லாபம் பெற எதிர்ப்பை ஊக்குவிக்கலாம்.
படகுச் சேவை மற்றும் பாலங்களை குறிப்பிடத்தக்க பாதுகாப்பு அபாயங்களாக தெற்கின் அரசியல்வாதிகள் உருவகிப்பார்கள். இந்தத் திட்டத்தினால் ஏற்படும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியானது இலங்கையின் வடக்கிற்கு முதன்மையாக நன்மை பயக்கும். இதனால் தெற்கிற்கு நேரடியான நன்மைகள் எதுவுமில்லை ஆனால் அதேவேளை இது இறையாண்மை, தேசியபாதுகாப்பு, தேசிய ஒருமைப்பாடு சார்ந்த ஆபத்துக்களை
தோற்றுவிக்கலாம். ஆகவே இந்தத்திட்டம் தேவையற்றது என்ற கருத்து தெற்கின் தேசியவாதிகளிடையே ஓங்கி ஒலிக்கலாம். இந்த முயற்சி ஏனைய நாடுகளிடையே குறிப்பாக பூகோள அரசியல் சார் அச்சங்களை ஏற்படுத்தும். பூகோள அரசியல் பதட்டங்களைத் தூண்டக்கூடிய, பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை ஆழப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இது பாாக்கப்படும். குறிப்பாக இலங்கையின்
தெற்கில் வேரூன்றிக்கொண்டிருக்கும் சீனா இதனை விரும்பாது. ஆகவே தெற்கின் சீன ஆதரவு சக்திகள் இந்தத் திட்டத்தை முறியடிக்க சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும். ஆகவே இத்தனையையும் கடந்தால் மட்டும்தான், இந்திய-இலங்கைப் பாலம் என்ற கனவும், வடக்கின் பொருளாதார மேம்பாட்டிற்கான பெரும் ஊக்கமும் சாத்தியமாகும்.
இந்தியா விரும்பினால், இந்தியாவிற்கு இது தேவை என இந்தியா கருதினால், இதனை நீண்டகாலத்தில் இந்தியாவினால் சாத்தியப்படுத்த முடியும். தெற்கு வௌிப்படுத்தும் அச்சத்தைகளையவேண்டியதுதான் இந்தியாவின் முதற்பணியாக அமையும். பாதுகாப்பு மற்றும் இறையாண்மை தொடர்பான கவலைகளைப் போக்குவதும், திட்டத்தின் சாத்தியமான பலன்களை, குறிப்பாக வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கும் நோக்கில், இந்த முயற்சியின் பலன்கள் இலங்கை முழுவதும் சமமாக விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்வதை தெற்கிற்கு உணர்த்த வேண்டியது அத்தியாவசியமானதாகும். இது தமிழர்களுக்காக இந்தியா செய்வது என்ற எண்ணத்தைக் களைய வேண்டும். இது முழு இலங்கைக்கும் நன்மை பயக்கும் திட்டம் என்ற எண்ணம் விதைக்கப்பட வேண்டும்.
கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும் மற்றும் உள்கட்டமைப்பு முறையான நோக்கங்களுக்காக மட்டுமே சேவை செய்கிறது என்பதைஉறுதிப்படுத்துவதும் அவசியம். இதற்காக இலங்கை இந்திய கரையோர, மற்றும் எல்லைப்பாதுகாப்பு துறைகளிடையேபுரிந்தணர்வும், இணைந்தியங்கும் உறவும் கட்டியெழுப்பப்பட வேண்டும். இலங்கையில் ஒரு போதும் பிரிவினையைஇந்தியா ஆதரிக்காது என்பதை இந்தியத வௌிப்படையாக அறிவிக்க வேண்டும்.
வரலாறு இந்த விடயத்தில் இந்தியாவிற்கு எதிராக இருக்கிறது. மீண்டும் அந்த வரலாறு மீளாது என்ற உறுதிப்பாட்டை இந்தியா இலங்கைக்கு, குறிப்பாக தெற்கிற்கு வழங்கவேண்டும். இதை இந்தியா வெற்றிகராமாகச் செய்தால், அது இந்திய-இலங்கை உறவின்தன்மையையே பலப்படுத்துவதாக அமையும். தமிழர்களுக்கு இந்தியா, ஆகவே சிங்களவர்களுக்கு சீனா என்ற தெற்கின் பார்வை மாறுவதில்தான், இந்தியாவின் இராஜதந்திர வெற்றி தங்கியிருக்கிறது. தென்னிந்தியாவிற்கும் இலங்கையின் வடக்கிற்கும் இடையில் ஒரு படகுச் சேவையை ஆரம்பிப்பதற்கும் பாலங்களை அமைப்பதற்குமான முன்மொழிவு போருளாதார அபிவிருத்தி, கலாசாரப் பரிமாற்றம் மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்புக்கான தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது என்பது மறுக்கமுடியாதது. இதனால் இலங்கையின் வடக்கு குறிப்பிடத்தக்க வகையில் பயனடையும் அதே வேளையில், இலங்கையின் தெற்கில் ஏற்படக்கூடிய எதிர்ப்பை, குறிப்பாக அரசியல் அச்சங்களை நிவர்த்தி செய்வது மிகவும் முக்கியமானது. வெளிப்படையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதன் மூலம், பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிசெய்து, பொருளாதார உள்ளடக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டின் உணர்வை வளர்ப்பதன் மூலம், கொள்கை வகுப்பாளர்கள் சவால்களை வழிநடத்தி, முழு நாடும் இந்த முயற்சியின் பலனைப் பெறலாம். அதனைச் செய்ய இலங்கையும், இந்தியாவும் அதன் தலைமைகளும் முழுமையான அக்கறை காட்ட வேண்டும். இல்லையென்றால், இதுவும் பேச்சோடு பேச்சாக காற்றில் கலந்து மறைந்துபோய்விடும் கனவுத்திட்டமாகிவிடும்!