இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 109 டிப்போக்களில் 55 டிப்போக்கள் நட்டத்தில் இயங்குவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை 54 டிப்போக்கள் இலாபம் ஈட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (08) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
நட்டத்தில் உள்ள டிப்போக்களை மேம்படுத்த பல புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நட்டத்தில் இயங்கும் 55 டிப்போக்களுக்காக பல புதிய நடவடிக்கைகளை பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திறமையற்ற முகாமையாளர்களை நீக்கி திறமையான டிப்போ முகாமையாளர்களை நியமித்தல், அதிகபட்ச அட்டவணைகளை இயக்குதல், பேருந்து சேவைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் மோசடி நடவடிக்கைகளை குறைத்தல், ஊழியர்களை ஊக்குவிக்க சம்பளத்தை திருத்துதல், ஊழியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி பட்டறைகள் நடத்துதல், ஒவ்வொரு டிப்போவிற்கும் நாளாந்த இலக்குகளை வழங்குதல், பேருந்துகளின் எரிபொருள் நுகர்வை திறமையாக நிர்வகித்தல், வாங்கப்படும் பொருட்களின் தரத்தை தொடர்ந்து சோதனை செய்தல், டிப்போவின் செலவுகளை எப்போதும் கட்டுப்படுத்த தேவையான அறிவுரைகளை வழங்குதல், மாதாந்த கணக்குகளை ஆய்வு செய்து எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் டிப்போக்களில் இருந்து கூடுதல் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற பல நடவடிக்கைகளுக்கு தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.