மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பதிவேட்டு அறையில் இருந்து வழக்கு ஆவண கோப்பு ஒன்றை திருடி அதில் இருந்த வாகன பதிவு ஆவணத்தை வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றி திரும்பவும் பதிவேட்டு அறையில் வைத்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நீதிமன்றில் கடமையாற்றி வந்த சிற்றூழியர் ஒருவரையும் மணல் வியாபாரி உட்பட இரு வரையும் தொடர்ந்து எதிர்வரும் 21 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டு நீதிமன்றம் கடந்த (07ம்) திகதி உத்தரவிடுள்ளது.
இது பற்றி தெரியவருவதாவது,
குறித்த நீதிமன்ற பதிவேட்டு அறையில் வைக்கப்பட்டிருந்த 4 ஆவணக் கோப்புக்கள் கொண்ட ஆவணங்கள் திருட்டுப் போயுள்ளதையடுத்து பொலிசாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் திருட்டுப் போன வாகன வழக்கு தொடர்பான ஆவணக் கோப்பு அடங்கிய ஆவணங்களை அங்கு கடமையாற்றி வந்த ஊழியர் ஒருவர் மணல் வியாபாரியுடன் இணைந்து அந்த வழக்கு ஆவணக் கோப்புக்களை அங்கிருந்து திருடிச் சென்று அந்த ஆவணக் கோப்பில் இருந்த ஆவணங்களை எடுத்துவிட்டு அதில் தனது பெயருக்கு மாற்றிய வாகன பதிவு ஆவணங்களை வைத்து மீண்டும் பதிவேட்டு அறையில் வைக்கப்பட்டுள்ளதை பொலிஸார் கண்டறிந்தனர்.

இதனையடுத்து குறித்த ஊழியரையும் மணல் வியாபாரியையும் கடந்த மாச் 12ம் திகதி கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து, அவர்களை கடந்த 7ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்காக கடந்த 7ம் திகதி நீதிமன்றில் இருவரையும் ஆஜர்படுத்திய போது வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதவான் இருவரையும் மீண்டும் எதிர்வரும் 21 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.