கறைபடிந்த கடந்த காலத்தில் இருந்து ஜே.வி.பி மீண்டு வர முனைகின்றது. நாங்களோ முள்ளிவாய்காலில் மூழ்கித் தவிக்கிறோம்.
ஜே.வி.பி தேசிய மக்கள் சக்த்தியாக தன்னை உருமாற்றியிருக்கிறது. அக்கட்சி ஜே.வி.பி அல்லாத ஹரினி அமரசூரியவையும், மொடரேற்றரான அனுரவையும் முன்னிலைப்படுத்துகிறது.
தமது தலைவர் றோகண விஜயவீரவை, தமது வீரப்பிரதாபங்களை பேசி மகிழ்வதை NPP தவிர்க்கிறது.
“கடந்த 35 ஆண்டுகளாக சிறு ஆயுதங்களையேனும் நாங்கள் கையில் எடுக்கவில்லை. 1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் தேர்தலில் போட்டியிட்ட எமது 08 சகோதரர்களை கொலை செய்தனர்.

எனினும் நாங்கள் வில்லையேனும் கையில் எடுக்கவில்லை. பயத்தினால் அல்ல. ஆயுதத்தில் உள்ள பலம் தொடர்பில் எங்களுக்கு நன்கு தெரியும்.
அதனை கையில் எடுத்தால் மீண்டும் கீழே வைக்க முடியாது. அது கிற்றாரில்லை என்கிறார் அமைச்சர் பிமல் ரட்நாயக்கா.
ஜே.வி.பியின் 1971 கிளர்ச்சியை அடக்கியது இந்திய ராணுவம் 1988 – 1989 இரண்டாவது கிளர்ச்சிக் காலத்தில் இந்தியாவை இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஜே.வி.பி கடுமையாக எதிர்த்தது.

இந்தியாவுக்கும் JVP க்கும் ஏறத்தாள அரை நுற்றாண்டுகால பகைமை தொர்ந்தது.
முன்னைய அரசாங்கங்கள் இந்தியாவுடன் செய்துகொள்ள முற்பட்ட ஒப்பந்தகளை ஜே.வி.பி நிராகத்தது.
அதேஜே.வி.பியின் முன்னணியான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினரும், ஜனாதிபதியும், பிரதமரும் மோடியை வரவளைத்து கூடிக் குலாவி பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளிட்ட பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்.
இந்தியாவை, சீனாவை, மேலைத்தேயத்தை, அமெரிக்காவை, ஐரோப்பிய ஒன்றியத்தை, சர்வதேச நிதி நிறுவனங்களை அனுர தலைமையிலான அரசாங்கம் தந்திரோபாய ரீதியில் கையாள்கிறது.
“சர்வதேசம் எமது அரசாங்கத்தை ஆதரிக்கிறது அதனால் அட்சிக் கவிழ்ப்பு என்பதற்கு இடமே இல்லை” என ரில்வின் சில்வா அறைகூவல் விடுத்திருக்கிறார்.
கடந்த தேர்தலில் மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்த்தி தமிழரசிடம் தோல்வி கண்டது. தோல்வியில் இருந்து மீண்டெழுவதற்கு கிழக்கு மக்களின் மனங்களை வெல்வதற்கு NPP புதிதாக முனைகிறது.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத்தின் கடத்தலுக்கும் பிள்ளையானின் கைதிற்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்கும் பிள்ளையானுக்கும் தொடர்பிருப்பதற்குரிய போதிய ஆதாரம் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றில் கூறியிருக்கிறார்.
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் வியாழேந்திரன் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவற்றின் மூலம் கிழக்கையும் ஒட்டுமொத்த நாட்டையும், கத்தோலிக்கர்களையும் NPP திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது.
எவரும் நெருங்க முடியாது என கருதப்பட்ட ராஜபக்ஸ குடும்ப உறுப்பினர்கள், அவர்கள் ஆட்சிக்காலத்தில் அவர்களுக்கு துணைபோனவர்கள் என முக்கிய அரசியல் பிரமுகர்களின் கைதுகள் தொடர்கின்றன.
காவல்துறை மா அதிபர் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டு பதவி பறிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மிஸ்டர் கிளீன் என கருதப்படும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு லஞ்ச ஊழல் ஒழிப்பு அணைக்குழு சமன் அனுப்பியிருக்கிறது.

வடக்கில் வீதிகள் திறக்கப்படுகின்றன. காணிகள் விடுவிக்கப்படுகின்றன. ஆலயத் திருவிழாக்களில் மல்லிகை பூக்களுடன் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இரண்டாவது தடவையாக வடக்கிற்கு செல்கிறார் ஜனாதிபதி.
“எமது மகன் வருவான் என தினமும் இரவு இரவாக கதவை திறந்து வைத்து காத்திருந்த வடக்கு, கிழக்கு, தெற்கில் வாழ்ந்த அனைத்து அம்மாக்களுக்கும் நாம் நீதியை பெற்றுக்கொடுப்போம்” என பிமல் ரட்நாயக்கா உறுதியளித்திருக்கிறார்.
இவை எல்லாம் உள்ளுராட்சி தேர்தலில் எதிரொலிக்காது என நாம் நம்புகிறோமா? தெற்கில் மட்டுமல்ல வடக்கு கிழக்கு மலையகத்திலும் கூட அநுரவுக்கோ, அவரது அரசாங்கத்திற்கோ, தேசிய மக்கள் சக்த்திக்கோ ஈடுகொடுக்கக் கூடிய தலைவர்களோ, கட்சிகளோ தற்போது இல்லை அனைத்தையும் அநுர சுனாமி அடித்துச் சென்றுவிட்டது.
இப்போது இலங்கையின் அரசியல், அநுரவுக்கு முன் அநுரவுக்கு பின் என துண்டாடப்பட்டிருக்கிறது.
அதனால் தமிழ், முஸ்லீம், மலையக கட்சிகளும் அவற்றின் அரசியல் பிரமுகர்களும், அநுரவுக்கு முந்தைய அரசியலையே அநுரவுக்கு பிந்தைய காலத்திலும் தொடர்வது சாத்தியமற்றது என்பதனை புரிந்துகொள்ள வேண்டும்.
அதேசமயம் நம்மை நாம் மீளாய்வு செய்ய வேண்டும், வரலாறு கற்றுத் தந்த பாடங்களில் இருந்து மீளவேண்டும், அதனை சுட்டிக்காட்ட முற்படும் போது அதனைப் புரியாது எம்மீது முத்திரை குத்துவதில் அர்த்தமில்லை.
கறைபடிந்த கடந்த காலத்தில் இருந்து அவர்கள் மீண்டு வர முனைகிறார்கள். நாங்களோ முள்ளிவாய்காலில் மூழ்கித் தவிக்கிறோம்.