மோடி – அனுர இடையே கடந்த வாரத்தில் 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பபட்டிருக்கின்றன. அவை இதுவரை பொது மக்களுக்காக வெளிப்படுத்தப்படவில்லை. அந்த ஒப்பந்தங்களில் இலங்கையை பெருமளவில் பாதிக்கக்கூடிய விடயங்கள் இருப்பது முன்னிலை சோஷலிஸக் கட்சியினால் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்தியாவின் மருந்தியல் ஆணைக்குழு (மருந்துகளின் பண்புகளையும் உற்பத்தி தரத்தையும் நிர்ணயிக்கும் அமைப்பு) – Indian Pharmacopoeia Commission (IPC) இற்கும் இலங்கையின் சுகாதார அமைச்சுக்கும் இடையில் கைச்சாத்தான ஒப்பந்தம் இலங்கை மக்கள் மீது பாரிய தாக்கத்தை செலுத்தக் கூடிய ஒன்று. அதனை விளங்கிக்கொள்ள கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள் அவசியமானவை.

🟥 இந்தியா 195 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்கிறது.
🟥 அவற்றில் 11 நாடுகள் மட்டுமே IPC தர நிர்ணயத்தை ஏற்றுக்கொண்டிருக்கின்றன.
🟥 ஏனைய அனைத்து நாடுகளுக்குமே BP (பிரித்தானிய) அல்லது USP (அமெரிக்க) தரநிர்ணயத்தின் அடிப்படையிலேயே மருந்துகளை இந்தியா உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்துவருகிறது.
🟥 இலங்கையும் BP அல்லது USP தரநிர்ணயத்தின் அடிப்படையில் உற்பத்தி செய்த இந்திய மருந்துகளையே இவ்வளவு காலமும் இறக்குமதி செய்து வந்துள்ளது.
🟥 இலங்கையில் இதுவரை BP, USP, JP (ஜப்பானிய) தரநிர்ணயங்களே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
🟥 இலங்கையில் மொத்த மருந்து இறக்குமதியில் 85% ஆன மருந்துகள் இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.
⚠️கடந்த 2022-24 ஆண்டுகளில் கெஹெலிய ரம்புக்வெல்லவின் காலத்தில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புக்களும், கண் பார்வை இழப்புக்களும் நாங்கள் அனைவரும் அறிந்ததே.
இவ்வாறான பின்புலத்தில்தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு தரநிர்ணயத்தின் அடிப்படையில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவுடன் கைச்சாத்திட்டிருக்கிறது.

இந்திய பெருமுதலாளிகளின், மருந்து மாபியாக்களின் நெருங்கிய நண்பரான மோடியின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்து இலங்கை மக்களை அதள பாதாளத்திற்குள் தள்ளிவிடும் நடவடிக்கையில் தே.ம.ச அரசாங்கம் இறங்கியிருக்கிறது.
தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவையில் இருப்பவர்களுக்குக் கூட அந்த ஒப்பந்தங்களில் என்ன இருக்கிறது என்பது தெரியாது என்பதால், இது தொடர்பில் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு, வேட்பாளர்களால் கையை பிசைவதை தவிர வேறு ஒன்றையும் செய்ய முடியாது.
🔴 பின் குறிப்பு; இந்த பிரச்சினை தொடர்பிலும் நாடாளுமன்றத்தில் இருக்கும் எந்தவொரு எதிர்க்கட்சியினை சேர்ந்தவர்களும் கேள்வி எழுப்பவில்லை. மோடிக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து, பரிசு கொடுத்து பல்லிளித்தவர்கள் எவ்வாறு கேள்வியெழுப்புவார்கள். அவர்கள் காட்டும் இந்திய விசுவாசத்தின் சிறிதளவேனும் அவர்களுக்கு வாக்களித்த மக்கள் மீதும் இருந்தால் நல்லது.