அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரி குறித்து விதிக்கப்பட்டுள்ள மூன்று மாத தடை நீங்கும் வரை காத்திருக்காமல், இதனை அவசர நிலைமையாக கருதி உடனடியாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் விளக்கமளித்து நேற்று (16) விசேட அறிவிப்பொன்றை விடுத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமெரிக்க ஜனாதிபதி தீர்வை வரி அமுலாக்கத்தை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைத்துள்ளார். இருந்தபோதும் 03 மாத நிறைவில் இந்த தீர்வை வரி அமுலாக்கப்படும். ஜனாதிபதி ட்ரம்ப் அவரது தேர்தல் கொள்கை பிரகடனத்திலும் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

எமக்கு விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரியை குறைத்து, 25 30 தீர்வை வரியை நாம் செலுத்தினாலும் அது எமக்கு பெரும் சிக்கலாக அமையும்.
எமது வர்த்தகங்களின் இலாபத்தின் அடிப்படையில் நோக்கினால் இவ்வாறான தீர்வை வரியினூடாக இலாபத்தை உழைக்க முடியாது.
அது நட்டத்தையே ஏற்படுத்தும். தீர்வை வரி அதிகரிக்க அதிகரிக்க நுகர்வோரின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடையும். இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதென்றால் இந்த மூன்று மாதங்களில் சகல நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி சீனாவின் பிரச்சினையை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறோம் என்பதற்கு விளக்கமளிக்க வேண்டும்.
இதனை நிறுத்த முடியாது. இதன் தாக்கத்தால் தொழில் வாய்ப்புகள் இல்லாமல் போகக்கூடும். அதுமட்டுமல்லாமல், எமது பொருளாதாரத்துக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எமது மீள்செலுத்துகை பிரிவுக்கு பெரும் சுமை ஏற்படும்.

நாம் செலுத்த வேண்டியுள்ள நிதி மற்றும் கிடைக்கவுள்ள நிதிக்கும் இடை யிலான இடைவெளி அதிகரிக்கும். வருவாய் குறைவடைந்து கடன் அதிகரிக்கும். 300 பில்லியன் டொலரை மீள செலுத்த வேண்டியுள்ளது. இதற்காக எங்கிருந்து நிதி திரட்டினாலும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும்.
இந்த நெருக்கடியின் காரணமாக ரூபாவின் பெறுமதி தற்போதே வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 2028ஆம் ஆண்டு மீள செலுத்த வேண்டியுள்ள கடன் இலக்கின் அடிப்படையில் நாம் தற்போதிலிருந்தே செயலாற்ற வேண்டும்.
கடந்த வருடத்தில் 05 சதவீத வருமான வளர்ச்சியை ஏற்படுத்திக்கொண்டுள்ளோம். இருந்தபோதும் தற்போதுள்ள இந்த நெருக்கடியால் வருமான வளர்ச்சியும் வீழ்ச்சியை சந்திக்கலாம். இதனூடாக இலங்கைக்கு பல்வேறு பிரச்சினைகள் தோற்றம் பெறும்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதுடன் தேசிய மட்டத்தில் இதனை எதிர்கொள்வது என்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். இதனையொரு நெருக்கடியாக கருதி இந்த சிக்கலுக்கான அரசாங்கத்தின் தீர்வை நாட்டுக்கு அறிவிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் வேறு பிரச்சினைகள் தோற்றம் பெறக்கூடும்’’ என்றார்.