ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அசோக தோரதெனிய குறித்து மின்னணு, அச்சு மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் தவறான மற்றும் அவதூறான அறிக்கைகள் பரப்புவதைத் தடுக்க கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க, தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பிரதிவாதியான, இந்திராநந்த டி சில்வா எதிர்வரும் 30ஆம் திகதி மன்றில் முன்னிலையாக வேண்டும் என்றும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் தோரதெனியவின் முறைப்பாட்டை தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டின் இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் தோரதெனிய குறித்து வெளியிடப்பட்ட அறிக்கைகள் இணையப்பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 24 மற்றும் 12 ஆகியவற்றை மீறுவதாக, சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்னம் உட்பட்ட சட்டத்தரணிகள் மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
எனவே குறித்த தவறான அறிக்கைகள் மேலும் பரப்பப்படுவதை தடுக்க தடை உத்தரவை அவர்கள் கோரினர்.
இந்தநிலையில், வாதங்களைக் கருத்தில் கொண்ட பின்னர், மேலதிக நீதவான் இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.