தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன், நீதிமன்ற உத்தரவை மீறினார் எனத் தெரிவித்து மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) கோரிக்கையைத் தொடர்ந்து, தென்னகோனை ஏப்ரல் 25 வெள்ளிக்கிழமை முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக ஆதாரங்களை முன்வைக்க மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தயாரித்த ஏற்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு விடுக்கப்பட்டது.
தென்னகோனுக்கு பிணை வழங்கப்பட்ட ஏப்ரல் 10 ஆம் திகதி இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதன்படி நீதிமன்ற வளாகத்திற்குள் வாகனம் கொண்டு வர காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற அவரது சட்டக் குழுவின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்த போதிலும், நீதிமன்றத்தின் உத்தரவை மீறி அவர் உயர் ரக வாகனத்தில் நீதிமன்றத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

பின்னர் சிஐடி மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது, இதுவே புதிய அழைப்பாணையை அனுப்ப வழிவகுத்தது.
முன்னரும் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிற்ப்பித்த போதிலும் அவர் தலைமறைவாகியிருந்த நிலையில் பின்னர் நீதிமன்றில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.