இலங்கைப் பிரதிநிதிகளுக்கும் அமெரிக்க அரசாங்கத்துக்கும் இடையில் பரஸ்பர வரிச்சலுகைகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் பலனளித்ததாகக் கூறிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இலங்கையும் அமெரிக்காவும் விரைவில் கூட்டறிக்கை ஒன்றை வெளியிடும் என இன்று (23) தெரிவித்தார்.

இரத்தினபுரியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தற்போது அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக் குழுவினர் நேற்று (22) பயனுள்ள கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும், இந்த விடயம் தொடர்பில் இலங்கையும் அமெரிக்காவும் இணைந்து அறிக்கையொன்றை வெளியிடும் எனவும் தெரிவித்தார்.
“அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை பலனளித்ததாக துணை நிதியமைச்சர் எனக்குத் தெரிவித்தார்,” என்று அவர் கூறினார்.

EFF வேலைத்திட்டம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக இலங்கைப் பிரதிநிதிகள் அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றதுடன், அமெரிக்காவிற்கு இலங்கை ஏற்றுமதி செய்வதற்கு அண்மையில் விதிக்கப்பட்ட பரஸ்பர வரிச்சலுகைகள் தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளனர்.