உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரொருவர் 85 வாக்காளர் அட்டைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வஜன அதிகாரம் கட்சியின் புத்தளம் மாநகர சபைக்கான வேட்பாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக புத்தளம் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியால் விநியோகிக்கப்பட்ட வாக்காளர் அட்டைகள் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
புத்தளம் – ரத்மல்யாய பகுதியில் புத்தளம் உதவி தேர்தல் ஆணையாளர் மற்றும் காவல்துறையினர் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வாக்காளர் அட்டைகள், தபால்காரரால் சந்தேகநபருக்கு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன் சந்தேகநபரான தபால்காரர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று (24) வரையில் கைது செய்யப்பட்ட மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 6 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கைது செய்யப்பட்ட மொத்த ஆதரவாளர்களின் எண்ணிக்கை 98ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய நாளில் மாத்திரம் தேர்தல் தொடர்பான 3 குற்றவியல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பெறப்பட்ட மொத்த குற்றவியல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 61 ஆகும். தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக நேற்று 20 முறைப்பாடுகள் கிடைத்ததோடு, மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, கடந்த மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதியில் 23 வாகனங்கள் காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.