உயர்தர பரீட்சை பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பெறுபேறுகளை வெளியிடும்போது உரிய நபரின் சுட்டெண் வேறு நபர்களிடம் சென்றடைந்தால் அதனைக் கொண்டு வேறு நபர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கு சந்தர்ப்பங்கள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அதனைக் கணினி முறைமையில் இருந்து அகற்றி உரிய நபர்கள் விண்ணப்பிப்பதற்கு மீள ஏற்பாடுகள் செய்வதற்கு நீண்ட நாட்கள் எடுக்கும். எனவே உயர்தர பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் (2024) மொத்தமாக 9,457 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்தியைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதன்படி, மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்ற மாணவர்களின் சதவீதம் 3.45 சதவீதம் என அமித் ஜெயசுந்தர கூறியுள்ளார்.
பெறுபேறுகளின்படி, பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளில் 64.73 வீதமானவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக சேர்க்கைக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், 2023 ஆம் ஆண்டில் இது 64.33 வீதமாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, இந்த ஆண்டு (2024) உயர்தரப் பரீட்சைக்கு 274,361 பரீட்சார்த்திகள் தோற்றியதாகவும், அவர்களில் 177,588 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்ததாகவும் அமித் ஜெயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.