கொழும்பு, மோதர கோவில் அருகே உள்ள பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்று தொடர்பில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு 21 வயது இளைஞனை, தடிகள் மற்றும் விக்கெட்டுக்களால் தாக்கி கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 5 பேருக்கே, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க இன்று (28) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தில் கொலை குற்றச்சாட்டு உட்பட 3 குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாக கண்டறியப்பட்ட மேலும் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கில் 2வது மற்றும் 9வது பிரதிவாதிகள் குற்றம் நடந்த நேரத்தில் 18 வயதுக்குட்பட்டவர்களாக இருந்ததால், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீண்ட விசாரணையின் பின்னர் இன்றையதினம், நீதிபதி தீர்ப்பை வழங்கியுள்ளார். அதற்கமைய, வழக்கின் பிரதிவாதிகளாக சட்டமா அதிபரால் பெயரிடப்பட்ட 7 பிரதிவாதிகள் உட்பட 9 பேர் குற்றவாளிகள் என்பதை அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.
எனினும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நான்காவது மற்றும் ஆறாவது பிரதிவாதிகள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.