கனடா பாராளுமன்றத்தேர்தலில் காலிஸ்தான் ஆதரவாளரும் என்.டி.பி கட்சித் தலைவருமான ஜக்மீத் சிங் படுதோல்வி அடைந்தார்.
கனடாவில் நேற்று (28) பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து தற்போது முடிவுகளும் வெளியாகி இருக்கின்றன. இதில் பெரும்பான்மை இடங்களை ஆளும் லிபரல் கட்சி வென்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இந்த தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட என்.டி.பி எனப்படும் புதிய ஜனநாயக கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. அக்கட்சியின் தலைவரும், காலிஸ்தான் ஆதரவாளராக அறியப்படுபவருமான ஜக்மீத் சிங் தோல்வி அடைந்துள்ளார். இதையடுத்து, கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து இராஜினாமா செய்வதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

ஜக்மீத் சிங், கடந்த முறை ட்ரூடோ அரசுக்கு ஆதரவாக இருந்தவர். பாராளுமன்றில் ட்ரூடோ கொண்டு வரும் எந்த மசோதாவுக்கும் இவரது கட்சியே பெரும் ஆதரவளித்து வந்தது. பிற்காலத்தில் ட்ரூடோவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கூட்டணியில் இருந்து விலகிக்கொண்டார்.
இந்த தேர்தலில் ஜக்மீத் சிங் தோற்ற நிலையில், அவரது கட்சிக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கட்சிக்கு தேசிய அங்கீகாரம் பெற வேண்டுமானால் குறைந்தது 12 தொகுதிகளிலாவது வென்றிருக்க வேண்டும். ஆனால் அவரின் என்.டி.பி., கட்சி படுதோல்வி அடைந்துள்ளதால் கட்சியின் தேசிய அங்கீகாரமும் பறிபோகும் நிலைமை எழுந்துள்ளது.
போட்டியிட்ட தொகுதியில் ஏற்பட்ட தோல்வியால் கட்சியின் அங்கீகாரமும் பறிபோகும் நெருக்கடி என்ற நிலையில் தமது கட்சித் தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக ஜக்மீத் சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தேர்தல் முடிவு குறித்து அவர் தமது சமூகவலை தள பதிவில் கூறி உள்ளதாவது;
புதிய ஜனநாயக கட்சியினர் இந்த நாட்டை கட்டி எழுப்பினர். நாங்கள் எங்கும் செல்ல போவதில்லை. தேர்தலில் அதிக இடங்களை வெல்ல முடியாதது எனக்கு ஏமாற்றமே.
கட்சிக்காக நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். பயத்தை விட நம்பிக்கையை நாங்கள் தேர்ந்தெடுப்போம். பிரதமர் கார்னி மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் வாழ்த்துகள்.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.