இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரது சகல சமூக வலைத்தள கணக்குகளில் தகவல்களை பகிர்ந்திருக்கின்றார். எனவே அதனை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிந்திருந்தமை சாதரணமானதாகும். இது ஒரு இரகசிய தகவல் அல்ல என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையானதன் பின்னர் விசேட அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் அறிவித்தல் விடுக்கப்பட்டதையடுத்து கடந்த 11ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் தனது சகல சமூக வலைத்தள பக்கங்களிலும் தன்னால் அன்றைய தினம் முன்னிலையாக முடியாது என்றும், 17ஆம் திகதி முன்னிலையாவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இது ஒரு பொதுத் தகவலாகும். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இதன் ஊடாகவே அந்த தகவலை அறிந்திருப்பார். அவர் இந்த தகவலை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றியிருந்ததை மறந்தே கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார். மாறாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இது குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கவில்லை. ரணில் ஆணைக்குழுவில் முன்னிலையாவது இரகசிய தகவல் அல்ல.
முன்னாள் ஜனாதிபதி ரணில் அவரது சமூக வலைத்தளங்களில் இந்த தகவலைப் பகிர்ந்த பின்னரே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார். அதனை விடுத்து இந்த விவகாரத்தில் அரசாங்கமோ அல்லது ஜனாதிபதியோ எந்தவகையிலும் தலையிடவில்லை என்றார்.