மர்மமான முறையில் உயிரிழந்த சிறைக்கைதியொருவரின் மர்ம மரணம் குறித்து சிறைச்சாலைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த 01ஆம் திகதி அங்குணுகொலபெலஸ்ஸை சிறைச்சாலையில் நடைபெற்றுள்ளது.
நண்பர் ஒருவருக்கு பிணையாளியாக கைச்சாத்திட வந்த நபரொருவரின் தொலைபேசி நீதிமன்ற மண்டபத்தில் சத்தமாக ஒலித்த நிலையில், நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் முப்பதாம் திகதி எம்பிலிப்பிட்டிய மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட நபர் அங்குணுகொலபெலஸ்ஸை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மறுநாள் மர்மமாக உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனையின் போது அவர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உயிரிழந்தவரின் உறவினர்கள் பல்வேறு தரப்புகளுக்கு முறைப்பாடு அளித்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் குறித்த சிறைக் கைதி ஆரம்பம் தொட்டு சிறைச்சாலைக்குள் கலகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.