மட்டக்களப்பில் இன அழிப்பு வாரம் நிகழ்வு நேற்றைய தினம் (13) ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அங்குவந்து மக்களை அச்சுறுத்தும் வகையில் மக்களை புகைப்படம் வீடியோ எடுத்த பொலிஸ் உத்தியோகத்தர், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரினால் எச்சரிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்து சென்றார்.
தமிழ் இன அழிப்பு வாரம் நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பில் பெருமளவான மக்கள் கடத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட சத்துருக்கொண்டான் நினைவுத்தூபி அருகில் தமிழ் இன அழிப்பு வாரம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இதன்போது அங்கு சிவில் உடையில் வந்த கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் என்று தெரிவிக்கப்படும் ஒருவர் நிகழ்வினையும், நிகழ்வில் வந்தவர்களையும் புகைப்படம் எடுத்ததுடன் அங்கு நடைபெறும் நிகழ்வுகளையும் வந்தவர்களையும் வீடியோ செய்யும் நடவடிக்கையும் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார்.
இது தொடர்பில் அவதானித்த சமூக செயற்பாட்டாளர் செல்வகுமார் அவர்கள் பொலிஸ் உத்தியோகத்தரை நோக்கி நாங்கள் அமைதியான முறையில் நாங்கள் எங்கள் உறவுகளை நினைவுகூரும் நிகழ்வினை நடாத்திக்கொண்டிருக்கும்போது இங்குவந்து ஏன் இவ்வாறான பதிவுசெய்யும் நடவடிக்கைகளை எடுத்து மக்களை அச்சுறுத்துகின்றீர்கள் என்று கேள்விகளை எழுப்பியதுடன், அங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிநாத்தும் உங்களுக்கு இவ்வாறான செயற்பாடுகளை யார் செய்யச்சொல்லி அனுப்பியிருந்தார்கள் என்ற வகையான கேள்விகளை கேட்டபோது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அங்கிருந்து சென்றார்.
அரசாங்கம் இவ்வாறான நிகழ்வுகளை நடாத்துவதற்கு தடைகளை விதிக்காத போதிலும் இவ்வாறான பொலிஸார் நிகழ்வுகளை குழப்பும் வகையில் செயற்படுவதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
