வட, கிழக்கு மாகாணங்களில் தமிழரசுக்கட்சி முன்னிலை வகிக்கும் உள்ளுராட்சிமன்றங்களில் அக்கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கத்தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி, இருப்பினும் நல்லெண்ண அடிப்படையில் 4 பிரதேசசபைகளில் தாம் ஆட்சியமைப்பதற்கு தமிழரசுக்கட்சி இடமளிக்கவேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளது.
உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சி வடக்கு, கிழக்கில் 35 சபைகளில் முதல்நிலை பெற்றுள்ள நிலையில், அச்சபைகளில் ஆட்சியமைப்பதற்கு தார்மீக அடிப்படையில் ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒத்துழைக்கவேண்டும் என கட்சியின் அரசியல்குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மேற்குறிப்பிட்டவாறு இணைந்து ஆட்சியமைப்பது குறித்து கலந்துரையாடும் நோக்கில் அக்கட்சியினதும், ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணியினதும் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று (16) சுமந்திரனின் யாழ்ப்பாண இல்லத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணியின் சார்பில் சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வேந்தன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
அதன்படி தமிழரசுக்கட்சி கோரியது போன்று அக்கட்சி முதல்நிலை பெற்றிருக்கும் உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு தாம் ஒத்துழைப்பு வழங்கத்தயாராக இருப்பதாக ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணியின் பிரதிநிதிகள் அறிவித்தனர்.
அதேவேளை ஏற்கனவே வவுனியா மாநகரசபையில் தமது ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி ஆட்சியமைப்பதற்கு தமிழரசுக்கட்சி இணக்கம் தெரிவித்திருக்கும் நிலையில், நல்லெண்ண அடிப்படையில் மாந்தை மேற்கு பிரதேசசபை, மானிப்பாய் பிரதேசசபை, வலிகாமம் கிழக்கு பிரதேசசபை மற்றும் சாவகச்சேரி பிரதேசசபை ஆகிய 4 உள்ளுராட்சிமன்றங்களிலும் தாம் ஆட்சியமைப்பதற்கு இடமளிக்கவேண்டும் எனவும் ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணியினர் கோரிக்கையொன்றை முன்வைத்தனர்.
அதற்குப் பதிலளித்த தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள், தமது கட்சி முன்னிலை வகிக்கும் உள்ளுராட்சிமன்றங்களில் தாமே ஆட்சியமைக்கவேண்டும் என ஏற்கனவே தமிழரசுக்கட்சியின் அரசியல்குழுக்கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், ஆகவே இதுபற்றி தமது கட்சியின் மத்திய குழுவில் கலந்துரையாடியதன் பின்னர் வெகுவிரைவில் தீர்மானமொன்றை அறிவிப்பதாகவும் தெரிவித்தனர்.