நாட்டிற்கு வருகைதந்த பிலிப்பைன்ஸ் சுற்றுலாப் பயணி ஒருவரை, வெலிகமவில் உள்ள ஒரு சர்ஃபிங் நிறுவனத்தில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் தாக்கும் வீடியோ காட்சியை நேற்று (24) சுற்றுலாப் பயணி தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் ‘அத தெரண’ செய்திப் பிரிவு வினவிய போது, குறித்த சம்பவம் கடந்த வருடம் பெப்ரவரி 14 ஆம் திகதி பதிவாகியுள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருப்பதாகவும், வழக்கு செப்டம்பர் 11 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கைக்கு வருகைதரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பல்வேறு நபர்களால் தாக்குதல்கள் உட்பட எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் பதிவாகும் முறைப்பாடுகள் அல்லது சமூக ஊடகங்களில் பரவும் காணொளிகளுக்கு பதிலளிக்கும் வகையில், உடனடியாக நடவடிக்கை எடுத்து சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும், சில தனிநபர்கள் அல்லது தனிநபர் குழுக்கள் சமூக ஊடக வலையமைப்புகளில் மீண்டும் மீண்டும் பரப்பப்படுவதை அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவங்களையும், பொலிஸார் விசாரணைகளை நடத்தி தேவையான சட்ட நடவடிக்கை எடுத்த சம்பவங்களையும், அவை மிக சமீபத்தில் அல்லது சில நாட்களுக்கு முன்பு நடந்தது போல சித்தரித்து சமூக ஊடகங்களில் வௌியிடப்பட்டு வருகின்றன.
எனவே, சமூக ஊடகங்களில் முந்தைய சம்பவங்களை மீண்டும் பகிர்ந்து வரும் தனிநபர்கள் அல்லது குழுக்கள் நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காகவோ அல்லது வேறு ஏதேனும் நோக்கத்திற்காகவோ அவ்வாறு செய்கிறார்களா என்பது குறித்து விசாரணைகளை நடத்தி, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
