மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பிரதேசத்தில் 121 முஸ்லிம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு 33 வருட நிறைவுநாள் நேற்று முன்தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏறாவூர் பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்கள், பொதுச் சந்தைகள், உணவகங்கள்மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. எனினும் பிரதான வீதிப்போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. சுகதாக்கள் பேரவையின் தலைமையில் பல்வேறு அமைப்புக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து நினைவு நாள் அனுஷ்டிப்பிற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உயிரிழந்தவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நூறுஸ்ஸலாம் பள்ளிவாயலில் புனிதகுர்ஆன் பாராயணம் செய்யப்பட்டு விசேட பிரார்த்தனையும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உலமாக்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள்பலரும் பிரசன்னமாயிருந்தனர். சுதாக்கள் பூங்காவிலிருந்து அமை திப்பேரணியொன்று ஆரம்பமாகி பள்ளிவாயல் வீதி மற்றும் பிரதானவீதி ஆகிய பாதைகள் ஊடாக இப்பேரணி நகர சபையை அடைந்தது. அங்கு ஜனாதிபதிக்கான மகஜர் பிரதேச செயலாளரிடம் கையளிக்கபட்டது. 1990 ஆகஸ்ட் 12 ஆம் திகதியன்று இரவு ஏறாவூரில் வீடுகளில் தூக்கத்திலிருந்த பெண்கள் குழந்தைகள் வயோதிபர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் 121 பேர் எல்ரீரீஈ யினரால் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.