பாரிஸ் பிராந்தியம் உட்பட நாட்டின் வட பகுதிப் பிரதேசங்களில் கடந்த சில நாட்களாகக் காணப்பட்ட குளிருடன் கூடிய இதமான கோடைக் கால நிலை முடிவுக்கு வருகிறது. நாடெங்கும் அடுத்த சில தினங்களில் வெப்பம் அதிக உச்ச அளவுகளை எட்டும் என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தென் அரைப்பாகம் ஏற்கனவே கடும் வெப்பத்தைச் சந்தித்துள்ளது. அங்கு அது மேலும் உயர்வடைந்து அடுத்த வாரமளவில் 40 பாகைவரை பதிவாகலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் தெற்குப் பகுதியிலிருந்து மேலெழுந்து வரவுள்ள அனல் காற்று, நாட்டுக்கு மேலாக ஒரு வெப்ப அமுக்க வலயத்தை- வெப்பக் குவிமாடத்தை
உருவாக்கவுள்ளது என்றும்-அதன் விளைவாக ஏற்படவுள்ள உஷ்ணத்தைப் பெரும்பாலான பகுதிகளில் வசிப்போர் அனுபவிக்க நேரிடலாம் என்றும் – பிரான்ஸின் காலநிலை அவதான நிலையமாகிய மீற்றோபிரான்ஸ் தெரிவித்துள்ளது.
“வெப்பக் குவிமாடம்” என்பது வளிமண்டலத்தின் அனைத்து மட்டங்களிலும்
வெப்பக் காற்றை நிலைநிறுத்தி வைத்திருக்கின்ற, உயர் அழுத்தங்களாலான மூடிய மண்டலம் ஆகும். அது ஏற்படுத்துகின்ற உச்ச அளவான வெப்ப நிலையை நாடு முழுவதும் அடுத்த வாரம் திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் அனுபவிக்க நேரிடலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.