கொலன்ன பகுதியில் காணாமல் போனதாக கூறப்பட்ட வர்த்தகர் நேற்று (18) இரவு மிரிஹான காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நண்பரின் வீட்டில் பதுங்கியிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.
காணாமல் போன வர்த்தகர் மிரிஹானவில் உள்ள தனது நண்பரின் வீட்டில் பதுங்கி இருப்பதாக மிரிஹான காவல்துறையினருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காவல்துறையினர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, காணாமல் போனவர் வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
குறித்த வர்த்தகர், பல்வேறு நபர்களிடம் ஏறக்குறைய எழுபது லட்சம் கடன்பட்டுள்ளதாகவும், அந்த கடனை போக்குவதற்காக தலைமறைவாக திட்டமிட்டதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.
குறித்த நபர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி நேற்று கொலன்னாவை காவல்நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது, வர்த்தகர் பயணித்த வான் உலுதுவாவ பிரதேசத்தில் தெனிய கொலொன்ன வீதியில் உள்ள மயானம் ஒன்றிற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தகர் வான் ஒன்றில் தெனியா நகருக்குச் சென்று அங்கிருந்த வங்கியொன்றில் இருந்து 10 இலட்சம் ரூபா பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
அப்போது, அவர் நகரில் உள்ள ஒரு கடைக்கு சென்றிருந்தபோது, அவர் கடையை விட்டு வெளியேறுவது பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
வர்த்தகர் காணாமல் போனது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், தொழிலதிபர் தனது வங்கிக் கணக்கிலிருந்து 10 இலட்சம் ரூபாவை எடுத்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.
தேயிலை துாள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள தேயிலை விவசாயிகளுக்கு கொடுப்பனவு வழங்குவதற்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த வர்த்தகர் பல்வேறு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் 80 இலட்சம் ரூபாவை கடனாக பெற்றுள்ளதாகவும், கடனைத் தீர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று பிற்பகல் குறித்த வர்த்தகர் இருவரின் கணக்கில் நான்கரை இலட்சம் ரூபாவை வரவு வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.