பெண்கள் உலக கிண்ண கால்பந்து போட்டி கடந்த மாதம் 20 ஆம் திகதி நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமானது.
32 அணிகள் பங்கேற்ற 9 ஆவது பிரிஸ்பேனில் நேற்றுமுன்தினம் (19.08.2023) நடந்த 3 ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் ஸ்வீடன் அணி 2 – 0 என்ற கோல் கணக்கில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி 4 ஆவது முறையாக வெண்கலப்பதக்கத்தை பெற்றது.
இந்த நிலையில் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்று (20.008.2023) நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதல்முறையாக நுழைந்துள்ள இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
32 ஆண்டு கால பெண்கள் உலக கிண்ண கால்பந்து வரலாற்றில் இறுதிப் போட்டிக்கு நுழையாத இரு அணிகளும் இறுதி போட்டியில் சந்திப்பது இது முதல் முறையாகும்.
இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இந்த இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி வீராங்கனை கார்மோனா ஆட்டத்தின் 29 ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார்.
இதன் மூலம் முதல் பாதியில் ஸ்பெயின் அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதனையடுத்து நடந்த 2 ஆவது பாதியில் இரு அணிகளும் கோல் போட முடியாத நிலை காணப்பட்டது.
இறுதியில் ஸ்பெயின் அணி 1 – 0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதன் மூலம் ஸ்பெயின் அணி முதல்முறையாக கிண்ணத்தை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளது. வெற்றி பெற்ற ஸ்பெயின் அணி ஜெர்மனிக்கு அடுத்தபடியாக ஆண்கள் மற்றும் பெண்கள் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. ஸ்பெயின் அணி 2010 ஆம் ஆண்டு ஆண்கள் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் மகுடம் சூடியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.