கல்குடா வர்த்தகர்கள் ஒன்றிணைந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை திங்கட்கிழமை (21) முன்னெடுத்தனர்.
கோறளைப்பற்று வாழைச்சேனை, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி ஆகிய பிரதேச சபைகளுக்குட்பட்ட மீராவோடை, செம்மண்ணோடை, கருவாக்கேணி ஆகிய வாராந்த சந்தைகளை நிறுத்தக் கோரி வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீராவோடை, செம்மண்ணோடை ஆகிய பகுதிகளில் வர்த்தக நிலையங்களை மூடி இந்த ஆர்ப்பாடம் முன்னெடுக்கப்பட்டது.
முறையற்ற விதத்தில் இயங்கி வரும் வாராந்த சந்தைகளினால் தமது வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்த்தகர்கள் தெரிவிதனர்.
எனவே, பிரதேச சபைகளின் அனுமதிகளுடன் இயங்கி வருகின்ற வாராந்த சந்தைகளை இடைநிறுத்தி தாம் தொடர்ந்தும் சிறப்பான முறையில் வியாபாரத்தில் ஈடுபட பிரதேச சபைகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியவாறு தங்களது எதிர்ப்புக்களை வெளியிட்டனர்.
வாராந்த சந்தைகளை நிறுத்தக் கோரி வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேச சபைகளின் செயலாளர்களிடம் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.
இப் பாரிய ஆர்ப்பாட்டத்தில் பெரிந்திரளான வர்த்கர்கள் கலந்து கொண்டதுடன், பள்ளிவாசல் நிர்வாகிகள், சமூக மட்ட அமைப்பினர்கள், பௌத்த மத குருக்கள், மௌலவிமார்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.