மட்டக்களப்பு ஊறணி பகுதியில் வீடு ஒன்றில் திருடன் ஒருவர் உள்நுழைந்து, 65 வயது வயோதிப பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து 16 பவுண் தாலிக் கழுத்தியை அறுத்து திருடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (28) அதிகாலை 4.00 மணியளவில் நடந்ததாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.
பெண் வழமைபோல் அதிகாலை எழுந்து இறைவழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில், திருடன் வீட்டுக்குள் நுழைந்து கத்தியால் அச்சுறுத்தி தாலிக் கழுத்தியை பறித்து சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்த புதிய சைக்கிளையும் திருடி தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

சத்தம் எழுப்பியதும், கணவர் வந்து காயமடைந்த பெண்ணை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தார். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், திருடன் அன்றைய தினம் அருகிலுள்ள வீடுகளிலிருந்தும் தாச்சி, மோட்டார் சைக்கிள் தலைகவசம் போன்ற பொருட்களை திருடிச் சென்றது ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொக்குவில் பொலிசார், குறித்த கொள்ளையனை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








