இந்தியாவின் பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த மூன்று இலங்கையர்களை பெங்களூரு காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) கைது செய்துள்ளது.
இவர்கள் மூவருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் சாத்தியமான தொடர்புகள் இருப்பதாகவும் பெங்களூரு காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது, சந்தேகநபர்களுக்கு இலங்கை பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு இருப்பதாகவும் சிசிபி அதிகாரிகள் கண்டுபிடித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேநேரம், கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மீது இலங்கையில் கொலை வழக்குகள் மற்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களுக்கு எதிராக தற்சமயம் வெளிநாட்டினர் சட்டம் பிரிவுகள் 14,14(c) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 109,1208,212 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.