நான்கு நாட்கள் வெளிநாடு பயணத்திற்குப் பிறகு இந்தியா திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி , பெங்களூரூவில் இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலாவில் தரையிறங்கிய இடத்திற்கு சிவ்சக்தி(Shivshakti) என்று அழைக்கப்படும் எனக் கூறிய மோடி, இஸ்ரோவின் சாதனையை நினைவுகூறும் வகையில் இனி ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாகக் கடைபிடிக்கப்படும் என்றும் கூறினார்.
விஞ்ஞானிகளுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்துவிட்டு, அவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகள் அடுத்த தலைமுறையினரை விழிப்படையச் செய்தது மட்டுமின்றி, அவர்கள் மத்தியில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார்.
“நீங்கள் ‘மேக் இன் இந்தியா’ (Make in India) திட்டத்தை நிலாவுக்கு எடுத்துச் சென்றுள்ளீர்கள்,” என விஞ்ஞானிகளை பாராட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நமது விஞ்ஞானிகள் இஸ்ரோ ஆய்வு தளத்திலேயே செயற்கை நிலாவை உருவாக்கி, அதில் மென்மையாகத் தரையிறங்குவதை பலமுறை பரிசோதனை செய்துள்ளார்கள். நிலாவுக்குச் செல்வதற்கு முன் பல பரிசோதனைகளுக்கு தரையிறங்கிக் கலன் உட்படுத்தப்பட்டதால், அது நிச்சயம் வெற்றி அடையும்,” என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி கிரீஸ் பயணத்தை முடித்துக்கொண்டு நேரடியாக பெங்களூரு சென்றடைந்தார். அங்கு அவர் விஞ்ஞானிகளிடம் உரையாற்றி வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் 23 அன்று நிலாவின் தென் துருவத்தில் சந்திரயான்-3ஐ வெற்றிகரமாக தரையிறக்கியது. அப்போது தென்னாப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று இருந்தார்.
தென்னாப்பிரிக்காவில் இருந்தே தொலைபேசி மூலமாக விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி விரைவில் அவர்களை நேரில் சந்திப்பதாகத் தெரிவித்திருந்தார்.
பிரிக்ஸ் மாநாட்டிற்குப் பிறகு, பிரதமர் மோடி கிரீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இன்று (ஆகஸ்ட் 26) இந்தியா திரும்பிய மோடி, நேரடியாக பெங்களூரூவுக்கு சென்றார்.
பெங்களூரு ஹெச்.ஏ.எல் விமான நிலையத்தில் இறங்கிய பிரதமர் மோதி, ‘ஜெய் விக்யான்’, ‘ஜெய் அனுசந்தன்’ என்று கோஷமிட்டார்.