திருவிழா காலங்களில் ஆலயத் திருவிழாக்களை விட ஆலயங்களின் வெளிவீதியில் அமைக்கப்படும் கடைகளுக்கான ஏல விற்பனையே அண்மைக்காலத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றிஸ்வரர் பேராலய நிருவாகமானது இவ்வாறான ஏல கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து கிழக்கிலங்கை ஆலயங்களுக்கு முன்மாதிரியான ஓர் செயற்பாட்டை செய்து காட்டியுள்ளது.
முற்றுமுழுதாக ஏலம் அற்றதாக கட்டுபாட்டு விலையோடு கடைகளை வியாபாரிகளுக்கு பகிர்ந்தளித்து வியாபாரிகளுக்கும் பக்தர்களுக்கும் பெரும் உபகாரத்தை செய்து ஏனைய ஆலயங்களுக்கு முன்மாதிரியான செயற்பாட்டை மேற்கொண்டுள்ளது வரவேற்கத்தக்க ஒரு செயலாகும்.
திருவிழாக் காலங்களில் ஆலய வளாகத்தில் கடைகள் அமைப்பதற்கான நிலத்தினை போட்டி போட்டு முன்டியடித்துக்கொண்டு பெருந்தொகை நிதியினை கொடுத்து நிலத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஆலயத்திற்கு வரும் பக்தர்களிடம் அதிகமான விலைகளுக்கு பொருட்கள் விற்பனை செய்து ஆலய தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் அசௌகரியங்களை தடுக்கும் நோக்கில் இச் செயற்ப்பாட்டை ஆலய நிருவாகம் முன்னெடுத்துள்ளது.
ஏனைய ஆலய நிருவாக சபைகளும் இச் செயற்பாட்டை முன்மாதிரியாக கொண்டு தங்களது ஆலயங்களிலும் முன்னெடுத்து சென்றால் எதிர்காலத்தில் ஆலய வழிபாட்டுக்கு வரும் பக்தர்கள் மனநிறைவோடு ஆலய தரிசனத்தை மேற்கொண்டு வீடு செல்வதற்கு உதவியாக இருக்கும்.