இன்று மொபைலை எடுத்தாலே பெரும்பாலும் முதலில் நாம் திறப்பது ஒன்று யூடியூப்பாக இருக்கும் அல்லது வாட்ஸ்அப்பாக இருக்கும். அதிலும் நம் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான அப்ளிகேஷனாக மாறிவிட்டது யூடியூப். பாடல்கள் கேட்பது, முதல் சமையல், பொழுதுபோக்கு, அரசியல், திரைப்படங்கள், தொழில்நுட்பம் என அனைத்துமே யூடியூப்பில் அடங்கி விட்டது. ஆனால் நமக்கு பிடித்தமான விஷயங்களை யூடியூப்பில் தேடுவதற்கு நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.
ஒரு சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட பாடல் நம்முடைய மனதில் ஓடிக்கொண்டிருக்கும், ஆனால் அதன் முதல் வரியோ அல்லது பாடலின் வரிகளையே சட்டென்று நினைவு கூற இயலாது. அந்த பாடலை எப்படியாவது கண்டுபிடித்து கேட்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். இதுபோன்ற சூழல் கட்டாயமாக நம் அனைவருக்கும் நடந்திருக்கும். இதனை சமாளிப்பதற்கு பாடல்களை ஹம்மிங் செய்வதன் மூலமாக எளிதில் அந்த பாடல் கிடைக்கும் வண்ணம் ஆன்ட்ராய்டு ஏற்கனவே அதற்கான ஆக்சசை வழங்கியுள்ளது. ஆனால் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தற்போது கூகுள் இதே போன்ற ஒரு செயல்பாட்டை யூடியூப்பிலும் கொண்டு வர உள்ளது.
ஒரு பாடலை ஹம்மிங் செய்தோ அல்லது அந்த குறிப்பிட்ட பாடலை ரெக்கார்டிங் செய்வதன் மூலம், யூடியூப்பில் அது என்ன பாடல், பாடலின் வரிகள் என்ன என்பதை சுலபமாக கண்டுபிடிப்பதற்கான அம்சத்தை சோதித்து வருவதாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த அம்சம் தற்போது சோதனை கட்டத்தில் இருப்பதால் சிறிய குழுவிலான பயனர்களுக்கு மட்டுமே இது பயன்பாட்டிற்கு கிடைக்கிறது. குறிப்பாக ஆன்ட்ராய்டில் யூடியூப் பயன்படுத்தும் குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு இது கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த அம்சம் தற்போது iOS பயனாளர்களின் பயன்பாட்டிற்கு கிடைக்கவில்லை. மேலும் இந்த அம்சத்தை யூடியூப் எப்பொழுது வெளியிடும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இந்த அம்சத்திற்கான ஆக்சஸ் வைத்திருக்கக் கூடிய நபர்கள் யூடியூப் வாய்ஸ் சர்ச் பயன்படுத்தி புதிய பாடல் தேடுவதற்கான ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் தேட நினைக்கும் பாடலை ஹம் செய்தோ அல்லது ரெக்கார்ட் செய்தோ காட்டலாம். நீங்கள் தேடும் பாடலை யூடியூப் கண்டுபிடிப்பதற்கு நீங்கள் மூன்று வினாடிகள் அல்லது அதற்கும் அதிகமான வினாடிகள் அந்த பாடலை ரெகார்ட் செய்திருக்க வேண்டும். பாடலை யூடியூப் அடையாளம் கண்டதும் அந்த பாடலுக்கான தகுந்த அதிகாரப்பூர்வ மியூசிக் கன்டன்ட், பயனர் உருவாக்கிய வீடியோக்கள் மற்றும் ஷார்ட்ஸ் போன்றவை யூடியூப் அப்ளிகேஷனில் காண்பிக்கப்படும்.
கூகுள் ஏற்கனவே இந்த அம்சத்தை 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திவிட்டது. அதன் மூலமாக கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் கூகுள் சர்ச் அப்ளிகேஷன் பயன்படுத்தி நம் மனதில் இருக்கக்கூடிய விஷயங்களை ஹம்மிங் செய்து கண்டுபிடிக்கலாம். நாம் ஹம்மிங் செய்வதன் அடிப்படையில் கூகுள் மெஷின் லெர்னிங் பயன்படுத்தி பாடல்களை அடையாளம் கண்டுபிடிப்பதாக கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.