வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் என்று கூறித் திரியும் தமிழ் அரசியல்வாதிகள் கொழும்பில் ஏன் தங்கியுள்ளார்கள் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில வினவியுள்ளார்.
அத்துடன் கொழும்பு சிங்களவர்களின் தலைநகர் என்று அவர்களுக்குத் தெரியாதா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இலங்கை சிங்கள பௌத்த நாடு. இந்த நாட்டில் எந்த இடத்தையும் தமிழர்களுக்குச் சொந்தம் என்று தமிழ் அரசியல்வாதிகள் உரிமை கோர முடியாது.
வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் அல்ல. அங்கு மூவின மக்களும் வாழ்கின்றார்கள். இந்நிலையில், வடக்கு – கிழக்கில் மூவின மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கத் தமிழ் அரசியல்வாதிகள் முயல்கின்றார்கள்.
இதனால் தெற்கிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வடக்கு – கிழக்கில் விகாரைகளை நிறுவுதல் பௌத்த மயமாக்கல் எனில் தெற்கில் – கொழும்பில் இந்துக் கோயில்கள் கட்டப்பட்டமை இந்து மயமாக்கலா?
வடக்கு – கிழக்கில் சிங்களவர்கள் குடியேறுதல் சிங்கள மயமாக்கல் எனில் தெற்கில் – கொழும்பில் தமிழர்கள் குடியமர்ந்துள்ளமை தமிழர் மயமாக்கலா? தமிழ் அரசியல்வாதிகள் முதலில் வரலாற்றைப் படிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.