போதுமான உடல் செயல்பாடுகள் இல்லாமை ஒவ்வொரு ஆண்டும் 32 லட்சம் இறப்புகளுக்கு காரணமாகின்றன என உலக சுகாதார அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் தினமும் 10,000 அடி நடக்க வேண்டும் என்றுதான் பல காலமாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதைவிட குறைந்த தூரம் நடப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்று புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
தினமும் 5,000 அடிகளுக்கும் குறைவாக நடப்பதன் மூலம் நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்று ஆய்வு முடிவு கூறுகிறது.
உலகம் முழுவதிலும் இருந்து 2,26,000க்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், தினமும் 4,000 அடிகள் நடப்பது முன்கூட்டியே இறக்கும் அபாயத்தைக் குறைப்பதற்கு போதுமானதாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
தினமும் 2,300 அடிகள் நடப்பது மூலம் நமது இதயம், ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.
ஒருவேளை நீங்கள் அதிக அடிகள் நடந்தால், அதற்கு ஏற்ப அதிக பலன்களை பெற முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
4,000 அடிகளுக்கு பின் 20,000 அடிகள் வரை நடக்கும் ஒவ்வொரு 1000 அடிகளும் முன்கூட்டியே இறக்கும் அபாயத்தை 15 சதவீதம் வரை குறைக்கும்.