சந்திராயன்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய செய்தியை ஒட்டுமொத்த இந்தியாவே மகிழ்ச்சியாக கொண்டாடி கொண்டிருக்கும் இந்த சமயத்தில், மூன் அக்ரிமென்ட் என கூறப்படும் ஒன்றைப் பற்றி நாம் இன்று தெரிந்து கொள்ளப் போகிறோம்.
எதிர்காலத்தில் நிலவில் யாரும் எந்தவித இடையூறும் செய்துவிடக் கூடாது என்றும், அப்படி ஏற்படும் சிக்கல்கலை முறியடிக்கும் நோக்கத்தில் சில குறிப்பிட்ட நாடுகள் ஒன்று சேர்ந்து ஒப்பந்தம் ஒன்றை தயாரித்துள்ளனர். அதுதான் நிலவு ஒப்பந்தம் (Moon Agreement).
எதிர்காலத்தில் நிலவில் சர்வதேச மோதல்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். அதுமட்டுமின்றி, பூமியின் நெருங்கிய செயற்கைகோளாக இருக்கும் நிலவை, அறிவியல் ஆய்விற்காக மட்டுமே மற்ற நாடுகள் பயன்படுத்த வேண்டும் என்பதையும் குறிக்கோளாக கொண்டுள்ளது இந்த ஒப்பந்தம். மேலும், எந்தவொரு நாடும் நிலவில் ரானுவ தளம் அமைப்பதையோ அல்லது ஆயுதங்கள் பரிசோதிக்கும் தளமாக பயன்படுத்துவதையோ இந்த ஒப்பந்தம் தடை செய்கிறது.
இந்த ஒப்பந்தத்தின் வரைவு தயாரிக்கும் சமயத்தில் பல நாடுகளும் இதில் சேர ஆர்வம் காட்டின. ஆனால் காலப்போக்கில் தொழில்நுட்ப வளர்ச்சி அடுத்தகட்டத்திற்கு சென்றதாலும், பல நாடுகளும் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்ய ஆர்வமாக இருந்ததாலும், நாடுகளுக்கு இடையே பிற அறிவியல் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தற்போது இதுபோன்ற ஒப்பந்தங்களை கையெழுத்திடுவதற்கு பல நாடுகளும் முக்கியத்துவம் கொடுக்கின்றன. இதன் காரணமாக இப்போதெல்லாம் நிலவு ஒப்பந்தத்தை யாரும் எட்டிக் கூடப் பார்ப்பதில்லை.
நிலவில் கிடைக்கும் இயற்கை வளங்கள் மீது பல நாடுகளும் ஆர்வம் காட்டுகின்றன. அதே சமயத்தில் நிலவில் பெரியளவில் எந்தவொரு இடையூறும் செய்யக் கூடாது; நிலவின் மேற்பரப்பை எந்த நாடும் சொந்தம் கொண்டாட முடியாது என்று நிலவு ஒப்பந்தத்தில் இருக்கும் விதிமுறையை சில நாடுகள் மாற்ற நினைக்கின்றன. இது அந்த ஒப்பந்தத்தின் நோக்கத்திற்கே எதிரானதாகும்.
இந்தியா ஏன் கையெழுத்திட்டது?
இன்று விண்வெளி ஆராய்ச்சியில் உலகளவில் முக்கியமான இடத்தை இந்தியா பெற்றுள்ளது. நிலவின் மேற்பரப்பை மனிதகுல வளர்ச்சிக்காகவும் அறிவியல் ஆய்விற்காகவும் பயன்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது இந்தியா. இதற்கு உதாரணமாக சந்திராயன் திட்டங்களை கூறலாம். நிலவில் மற்ற நாடுகள் செய்ய முடியாத சாதனையை, அசால்டாக செய்து முடிக்கும் இந்தியாவின் திறமையை கண்டு உலக நாடுகள் எல்லாம் இன்று ஆச்சர்யப்படுகின்றன.
நிலவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அதே சமயத்தில் நிலவில் ஆராய்ச்சி செய்யும் ரஷ்யா, அமெரிக்கா, சீனா போன்ற முக்கியமான நாடுகளுக்கு இந்த ஒப்பந்தத்தில் எந்த உரிமையும் இல்லை. ஏனென்றால் இப்போதுவரை இந்த நாடுகள் எதுவும் நிலவு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. ஆகையால், இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருக்கவும், இதில் கூறப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மற்ற நாடுகள் கடைபிடிக்குமாறு கூறவும் இந்தியாவிற்கு கூடுதல் அதிகாரம் உள்ளது.
பல ஒப்பந்தங்கள் இன்று வந்துள்ள நிலையில், காலப்போக்கில் நிலவு ஒப்பந்தம் நீர்த்துப் போகாமல் இருக்க வேண்டுமென்றால், இந்தியா இதில் முக்கிய பங்காற்ற வேண்டும். ஒருவேளை இந்த ஒப்பந்ததிலிருந்து இந்தியா விலகினால், ஒப்பந்தத்தை பலவீனப்படுத்தி ஒன்றுமில்லாமல் செய்ய பல நாடுகள் வரிசைகட்டி தயாராக நிற்கின்றன.