கடந்த காலங்களில் புற்று நோயாளர்களின் அதிகரிப்பு காணப்படுவதாக மஹரகம தேசிய புற்றுநோய் நிறுவகத்தின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தேசிய புற்றுநோய் நிறுவனத்திற்கு தினமும் சுமார் 36 புதிய புற்றுநோயாளிகள் பதிவாகி வருவதாக அவர் கூறினார்.
அதன்படி, அந்த நிறுவனத்தில் மட்டும் பதிவாகும் புதிய புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை மாதாந்தம் 1,000ஐத் தாண்டியுள்ளது.
மேலும், தற்போது தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் சுமார் 1,000 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், நாளாந்த அடிப்படையில் சுமார் 2,000 நோயாளிகள் கிளினிக்குகளில் சிகிச்சை பெறுவதாகவும் டாக்டர் அருண ஜயசேகர மேலும் தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கையிலான நோயாளர்களுக்கு மேலதிகமாக, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் உள்ள புற்றுநோய் பிரிவுகளில் புதிய நோயாளிகளும் பதிவாகி சிகிச்சை பெறுகின்றனர்.
தவறான உணவுப் பழக்கவழக்கங்கள், சுற்றாடல் பாதிப்புகள், வெற்றிலை வழங்கல், புகைத்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் போன்ற பல காரணிகள் புற்றுநோயை ஏற்படுத்துவதாகவும் டாக்டர் அருண ஜயசேகர சுட்டிக்காட்டினார்.