எதிர்வரும் மார்ச் 30ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேசிய பாடசாலைகளிலும் ஆங்கில பேச்சு மொழியை கற்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். ஆங்கில மொழியின் சிறப்பு மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், தரம் 6 முதல் 9 மற்றும் 10 முதல் 13 வரையான அனைத்து
பாடசாலை பாடத்திட்டங்களையும் சர்வதேச மட்டத்துக்கு கொண்டு வருவதற்கு தேவையான மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்படும் என்றும் இதற்கான முன்னோடித் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தகவல் தொழில்நுட்பத்துடன் செயற்கை நுண்ணறிவு பாடத்தையும் கற்பிக்க அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் தேவையான பாட அபிவிருத்தி மற்றும் வள திட்டமிடல் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்
தெரிவித்தார்.
2030 ஆம் ஆண்டளவில் கல்வித்துறை தொடர்பான உலகளாவிய நிலையான அபிவிருத்தி இலக்குகளை
அடைவதற்கான சவாலை வெற்றிகொள்ள அமைச்சு செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
அடுத்த மாதம் முதல் 8 ஆயிரம் கல்லூரி ஆசிரியர்களையும், 26 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களையும் சேர்த்து
பாடசாலைகளின் மனித வளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்படும் இச்செயற்பாடுகளின் போது பிள்ளைகளை ஒழுங்காகக் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்துவது பெற்றோரின் கடமை என்றும் சுட்டிக்காட்டினார்.