உலகம் முழுவதும் எழுத்தறிவின்மையை வேருடன் அகற்றும் நோக்கத்தில் யுனெஸ்கோவின் ஐ.நா கல்வி அறிவியல் கலாச்சார அமைப்பு சார்பில் சர்வதேச எழுத்தறிவு தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
1967ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் திகதி முதல் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் எழுத்தறிவு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச அளவில் எழுத்தறிவு தினம் இன்னாளில் கொண்டாடுவதற்கு வரலாறும் உண்டு.
மனித குலத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றங்களுக்கு எழுத்தறிவு என்பது மிகப்பெரிய தடையாக இருப்பதை ஒரு கட்டத்தில் உலக நாடுகள் உணர்ந்தன.
இதையடுத்து 1965ம் ஆண்டில் ஈரான் நாட்டின் தலைநகர் டெக்ரானில் உலக நாடுகளின் கல்வி அமைச்சர்களின் மாநாடு ஒன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் எழுத்தறிவின்மையால் உலக நாடுகளில் ஏற்படும் அரசியல், சமூக பொருளாதார பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
உலகிலிருந்து எழுத்தறிவின்மையை அறவே ஒழிக்க தேவையான அனைத்து பணிகளையும், நடவடிக்கைகளையும் பட்டியலிட்டு அறிக்கை அளித்தது.
இதையடுத்து 1966ம் ஆண்டு நவம்பர் 17ம் திகதி நடத்திய யுனெஸ்கோவின் 14வது பொதுக்குழுவில் எழுத்தறிவின்மையை போக்குவதற்காக மாநாடு நடைபெற்ற செப்டம்பர் 8ம் தேதியை சர்வதேச எழுத்தறிவு தினமாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, 1967ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8ம் திகதி சர்வதேச எழுத்தறிவு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
எழுத்தறிவு என்பது ஒரு நபர் படிக்க அல்லது எழுதும் திறனை வளர்த்துக் கொள்வது மட்டுமல்லாமல், மக்களை இணைக்கவும், அதிகாரம் அளிக்கும் திறன், உலகத்துடன் தொடர்பு கொள்ளவும் உதவுகிறது.
மொத்தத்தில் உலக நாடுகள் எடுத்த முயற்சிகளால் சர்வதேச அளவில் எழுத்தறிவு விகிதம் அதிகரித்து உள்ளது. குறைந்தபட்சம் 15 வயதுக்குட்பட்ட அனைத்து ஆண் மற்றும் பெண்களின் கல்வியறிவு விகிதம் 86.3% ஆகவும், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்களின் கல்வியறிவு விகிதம் 90% ஆகவும் உள்ளது.
அதே சமயம் உலகளவில் பெண்கள் 82.7% ஆக சற்று பின்தங்கிய நிலையில் உள்ளனர். இருப்பினும், நாட்டிற்கு நாடு பெரியளவில் வேறுபாடுகள் உள்ளன.
அந்டோரா, பின்லாந்து, லிச்டென்ஸ்டென், லக்சம்பர்க், வடகொரியா, நார்வே மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் 100 சதவீதம் எழுத்தறிவு பெற்றுள்ளன.