திருகோணமலை-இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரைக்கான பதாகை நடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருகோணமலை – நிலாவெளி பிரதான வீதியின் பெரியகுளம் சந்திக்கு அருகில் உள்ள இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர் பொறிக்கப்பட்ட பதாகை நடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த பதாகை நேற்று (09.09.2023) காலை பௌத்த பிக்குகள் சிலரால் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பதாகை நடப்பட்டதன் பின்னர் அப்பகுதியில் பொலிஸார் சிலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிங்கள மக்களின் குடியிருப்பு இல்லாத பகுதியில் குறித்த விகாரை அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் இச்செயற்பாடானது இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன் குறித்த விகாரைக்கான பணிகளை இடைநிறுத்தக்கோரி ஆளுநரினால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இச் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும் இலுப்பைக்குளம் பகுதியில் குறித்த விகாரை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்களினால் கடந்த (03.09.2023) அன்றைய தினம் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.