11ஆவது தேசிய விபத்துத் தடுப்பு வாரம் இன்று (06) முதல் ஆரம்பமாகி, ஜூலை 10ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.
சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த வேலைத்திட்டம், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் காயங்களைக் குறைத்து, மக்களிடையே பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளர்களில் குறிப்பிடத்தக்கோர் திடீர் விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது. குறிப்பாக விழுதல், வீதி விபத்துகள், வேலைத்தள விபத்துகள், நீரில் மூழ்குதல் மற்றும் வீட்டு விபத்துகள் அதிகளவில் பதிவாகின்றன.

இந்த தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு, இன்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் சுகாதார அமைச்சு வளாகத்தில் நடைபெறவுள்ளது.
வாரத்தின் ஒவ்வொரு நாளும் தனித்தனி கருப்பொருளின் கீழ் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
- ஜூலை 06 – வீதி விபத்துக்களைத் தடுக்கும் தினம்
- ஜூலை 07 – வேலைத்தள விபத்துக்களைத் தடுக்கும் தினம்
- ஜூலை 08 – வீடுகள் மற்றும் முதியோர் இல்லங்களில் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்கும் தினம்
- ஜூலை 09 – நீரில் மூழ்கி ஏற்படும் விபத்துக்களைத் தடுக்கும் தினம்
- ஜூலை 10 – பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பகல்நேரப் பராமரிப்பு நிலையங்களில் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்கும் தினம்
இந்த வாரத்தின் போது நாடு முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஆபத்தான இடங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள், பாதுகாப்பான சூழலை உருவாக்கும் செயல்திட்டங்கள் மற்றும் விபத்துகளை குறைக்கும் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
அரசு நிறுவனங்கள், சுகாதாரத் துறை, கல்வித் துறை, பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் தொடர்புடைய பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்புடன் இந்த தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.








