இலங்கையில் முதியோர் சமூகத்தில் சுமார் 10 சதவீதமானோர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுநீரக நோய் தொடர்பான விசேட நிபுணர் வைத்தியர் அனுபமா டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் இதுவரை கண்டறியப்படாத பல சிறுநீரக நோயாளர்கள் இருக்கக்கூடும் எனவும், உரிய பரிசோதனைகள் மூலம் அவர்களை அடையாளம் காண வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீரிழிவு நோய் சிறுநீரக பாதிப்புகளுக்கான பிரதான காரணியாக மாறியுள்ளதாக தெரிவித்த அவர், இலங்கையில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 25 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தவறுதல், உயர் குருதி அழுத்தம், இதய நோய்கள் மற்றும் உடலில் நச்சுத்தன்மை அதிகரித்தல் போன்றவை சிறுநீரக நோய்க்கான முக்கிய காரணங்களாக காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலை தொடர்ந்தால் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் 25 சதவீதத்தைத் தாண்டி, 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் வைத்தியர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், கொழும்பு மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளில் இளைஞர்களிடமும் சிறுநீரக பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், உடற்கட்டமைப்பு மற்றும் சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் சில மருந்துகளின் பாவனை இதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








