டெங்கு நோயால் உயிரிழப்பவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக மருத்துவ சிகிச்சையைப் பெறுமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவிக்கையில், இந்த ஆண்டில் பதிவான 53 டெங்கு மரணங்களில் 37 பேர் பெண்கள் எனக் குறிப்பிட்டார். சுகவீனமாக இருந்தபோதும் போதிய ஓய்வெடுக்காமல் வீட்டு வேலைகளில் ஈடுபடுவதும், சிகிச்சையை தாமதப்படுத்துவதும் உயிரிழப்புகளுக்கான முக்கிய காரணங்களாக அவர் சுட்டிக்காட்டினார்.
டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் பாரம்பரிய அல்லது வீட்டு வைத்தியங்களை நம்பாமல், இரண்டு நாட்களுக்குள் தகுதியான மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பப்பாசி இலைச் சாறு உள்ளிட்ட நிரூபிக்கப்படாத வைத்தியங்களைத் தவிர்க்குமாறும், காய்ச்சலுக்கு பரசிட்டமோல் தவிர வேறு மருந்துகளை தானாக உட்கொள்ள வேண்டாமென்றும் அறிவுறுத்தினார்.
இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 74,478 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், டெங்கு பரவலைத் தடுக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது அனைவரின் பொறுப்பு என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.








