நிபா வைரஸ் தொற்று இலங்கைக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக உரிய நோய் கண்காணிப்பு நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, கால்நடை உற்பத்தி
மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமலி கொத்தலா
வவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பேராதனையில் உள்ள சுகாதாரத் திணைக்கள அலுவலகத்திற்கு விஜயம் செய்த அமைச்சர், அங்கு நிலைமைகளை ஆராய்ந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியாவின் பல பகுதிகளிலும் கொடிய நிபா வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில் பல
நாடுகளுக்கு இதுதொடர்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
நாட்டில் கால்நடை உற்பத்தித் தொழிலைப் பாதுகாப்பதற்கும் பொதுச் சுகாதாரத்துக்கும்
மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் ஆய்வுகளை மேற்கொண்டார்.
நாட்டில் கால்நடை உற்பத்தியை அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.இதன்போது கருத்து தெரிவித்த பணிப்பாளர் நாயகம்
ஹேமலி கொத்தலாவ, இந்த நோய் இலங்கைக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் மிகக்குவாகவே உள்ளது.
குறிப்பாக பன்றிகளால் இந்நோய் பரவக் கூடிய சாத்தியம் காணப்படுவதால், நாட்டில் உள்ள பன்றிகள் வளர்க்கப்படும் இடங்களில் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும்
உத்தரவுகளை சுகாதார திணைக்களம் மேற்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.இதேவேளை, பறவைக்
காய்ச்சல் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பது போல், நிபாவைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.