இலங்கையில் பிரபல பல்பொருள் அங்காடியான கார்கில்ஸ் ஃபுட் சிட்டி ஹங்வெல்ல கிளையில் நேற்றைய தினம் இடம்பெற்ற சம்பவம் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
ஹேலிஸ் நிறுவனத்தில் நிறைவேற்று அதிகாரியாக பணிபுரியும் பெண்ணொருவரை கார்கில்ஸ் ஹங்வெல்ல கிளையில் பணியாற்றும் முகாமையாளர் உட்பட அங்கு பணிபுரியும் சாதாரண ஊழியர்கள் அனைவரும் அந்த பெண்ணை அங்காடியின் பிரதான வாயிலை பூட்டி வைத்து கொடூரமாக தாக்கும் சம்பவம் சிசிடிவியில் பதிவாகி அக் காணொளி முகப்புத்தகங்களில் பகிரப்பட்டு வருவதுடன் பல்வேறு விதமான அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கார்கில்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுருக்கிறது.
அந்த அறிக்கையில்-
“எங்கள் விற்பனை நிலையத்தில் இடம்பெற்ற திருட்டு தொடர்பாக நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம்.
இந்த நடத்தை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. கார்கில்ஸ் நிறுவனத்தின் செயல்முறையுடன் இவ்வாறான செயல் ஒரு போதும் ஒத்துப்போகவில்லை என்பதால், குறிப்பிட்ட ஊழியர்களின் நடத்தை குறித்து நாங்கள் அதிர்ச்சியும் வெட்கமும் அடைகிறோம்.
தாக்குதலில் ஈடுபட்ட ஊழியர்களை இடைநிறுத்திவிட்டு விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்.
கார்கில்ஸ் மீதான எங்கள் வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறோம்.
தரமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதில் எங்களின் அர்ப்பணிப்பு தொடரும். உங்கள் புரிதலுக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் நன்றி.” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கார்கில்ஸ் பல்பொருள் அங்காடியென்பது இலங்கை பூராகவும் 500க்கு மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது.
ஆனால் அங்கு ஒரு திருட்டு நடக்கும் போது அதை எவ்வாறு கையாளவேண்டும் என்ற அடிப்படை பயிற்சி கூட அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லையா என்றே இங்கு எண்ணத்தோன்றுகிறது.
ஆண்,பெண் என அனைத்து ஊழியர்கள் மற்றும் அங்கு அனைவரையும் கண்காணிக்கும் முகாமையாளர் என்போர் ஒன்றாக சேர்ந்து தாக்குவது என்பது ஏற்றுக்கொள்ளப்படமுடியாத ஒரு விடயம். இவ்வாறான சம்பவங்களை கையாளவேண்டிய அந்த இடத்தின் பாதுகாப்பு அதிகாரி பார்த்துக்கொண்டு இருக்கும் வேளையில் சினிமா பாணியில் கொல்லும் அளவிற்கு தாக்குதல் நடத்துவது என்பது பல கேள்விகளை முன்னிறுத்தியுள்ளது.
காகில்ஸ் ஃபுட் சிட்டி என்பது இலங்கையில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தங்கள் கிளைகளை திறந்து வியாபரம் செய்கின்ற ஒரு பல்தேசிய கம்பெனியாகவே காணப்படுகின்றது.
பல்தேசிய கம்பெனிகள் என்று சொல்லுகின்ற பொழுது தங்களுடைய இலாபத்தை மாத்திரம் நோக்கமாக கொண்டு செயல்படுகின்ற ஒரு நிறுவனம். அதற்காக அவர்கள் மக்களுக்கு பொருட்களை அல்லது சேவைகளை வழங்குவது என்பது அந்த பல்தேசிய கம்பெனிகளில் அடிப்படையாகவே இருக்கின்ற ஒரு விடயம். அந்த வகையில் இலங்கையில் காணப்படுகின்ற காகில்ஸ் ஃபுட் சிட்டி என்னும் பல்தேசிய கம்பெனியும் பல்வேறு பொருட்களை தங்களுடைய விற்பனை அங்காடியில் வைத்து விற்பனை செய்து வருகிறது.
ஆரம்ப காலகட்டத்தில் காகில்ஸ் ஃபுட் சிட்டி ஆரம்பிக்கப்பட்ட பொழுது கிராமங்களில் நடந்த விடயம் என்னவென்றால் கிராமங்களில் இருக்கின்ற சிறிய அங்காடி உரிமையாளர்கள் தங்களுடைய தொழில்களை எல்லாம் இழந்தார்கள் என்பது ஒரு பக்கம் இருக்கின்ற உண்மையான விடயம் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டி இருக்கிறது. அதே சமயம் காகில்ஸ் ஃபுட் சிட்டியில் நடந்த இந்த சம்பவம் வெறுமனே ஒரு தாக்குதல் சம்பவம் என்ற அடிப்படையிலே பார்க்கப்பட முடியாது. இது கட்டமைக்கப்பட்ட அல்லது நிறுவன ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஒரு வன்முறையாகவே பார்க்கப்பட வேண்டி உள்ளது.
இலங்கையிலே ஏற்பட்டிருக்கின்ற பல்வேறுபட்ட சிக்கலான அரசியல் பொருளாதார சூழல்களில் இவ்வாறான தனிப்பட்ட நிறுவனங்கள் தங்களுடைய பாதுகாப்பு என்ற ரீதியிலே பொதுமக்கள் மீதும் அல்லது அங்கு வருகின்ற வாடிக்கையாளர் மீதும் தாக்குதலை நடத்துவது மற்றும் சிறிய சிறிய விடயங்களுக்காக மிக மோசமாக நடந்து கொள்வது என்பது அண்மைக்காலங்களில் இலங்கையிலே பரவலாக நடக்கின்ற விடயமாக இருக்கின்ற படியால் இது தங்களை யாரும் எதுவும் செய்து விட முடியாது,தங்களை யாரும் தட்டிக் கேட்க முடியாது என்கின்ற ஒரு அதிகாரத்தனத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாகவுமே பார்க்கப்பட வேண்டி இருக்கிறது.
மக்களுடைய இலாபத்திலே நடத்தப்படுகின்ற நிறுவனம் அந்த லாபத்தைக் கொண்டு தங்களுடைய ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குகின்ற ஒரு நிறுவனம் நடந்த சம்பவம் சரியா பிழையா என்பதற்கு அப்பால் நடந்த ஒரு சம்பவத்திற்காக மிக மோசமான தாக்குதலை மேற்கொண்டிருப்பது என்பது இந்த நிறுவனத்தின் எதேச்சதிகார போக்கையே காட்டி நிற்கின்றது.
இந்த அடிப்படையில் காகில்ஸ் ஃபுட் சிட்டி என்பது ஒரு வன்முறையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பல் தேசிய கம்பெனியாக பார்க்கப்படும் இடத்தில் அல்லது அதுதான் அவர்களுடைய உண்மையான சுய ரூபமாக இருக்குமேயானால் மக்கள் கட்டாயமாக இந்த நிறுவனங்களை நிராகரிக்க வேண்டிய ஒரு நிலைமை இலங்கையில் ஏற்படக்கூடிய ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது. இல்லையேல் மக்கள் இந்த நிறுவனத்திற்கு எதிராக போராட்டங்களில் இறங்க வேண்டிய நிலையும் ஏற்படலாம். ஆகையினால் நடந்த முடிந்த சம்பவத்தை மன்னிப்பு கேட்பது என்று சாதாரண ஒரு வார்த்தைக்குள் அடக்கி விடாமல் நடந்த சம்பவத்திற்கு எதிராகவும் ,அதனோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பிலும் தங்களுடைய நிலைப்பாடு என்ன என்பதை மிகத் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் காகில்ஸ் ஃபுட் சிட்டி நிறுவனம் வெளியிட வேண்டும்.
காகில்ஸ் ஃபுட் சிட்டி எவ்வாறு நடந்து கொள்கின்றது என்பதில் தான் எதிர்காலத்தில் அவர்களுடைய செயற்பாடுகள் அல்லது அவர்களுடைய வியாபாரம் எவ்வாறு இலங்கையில் அமையும் என்பதையும் பார்க்க வேண்டி இருக்கின்றது. ஆகையினால் இந்த சம்பவம் சாதாரணமாக கடந்து செல்லுகின்ற ஒரு விடயமாக அல்லாமல் நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு அமைப்புக்குள்ளே நடந்த வன்முறை என்ற படியால் இதை ஆழமாக பார்க்க வேண்டிய தேவை இன்றைய காலகட்டத்தில் அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ளது என்பதையே இந்த சம்பவம் சுட்டிக்காட்டி நிற்கின்றது.