மட்டக்களப்பு மாந்தீவு பிரதேசத்தில் அமைந்துள்ள தொழுநோய் வைத்தியசாலை நடவடிக்கைகள் நிறைவுற்றுள்ள நிலையில் அப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தொகுதி மற்றும் வளாகத்தினை தற்போதைய நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு அதிகரித்தி வரும் மனநிலை ரீதியான பிரச்சனைகளைக் குறைக்கும் முகமாக இயற்கையுடன் கூடிய பயிற்சி நிலையம் ஒன்றை அமைக்கும் விதமான செயற்திட்ட முன்மொழிவு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை பணிமனையினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குறித்த திட்ட முன்மொழிவு மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து எதிர்வரும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் திட்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இன்றைய தினம் பணிமனையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனை வெளிப்படுத்தியிருந்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் மற்றும் துறைத்தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (22) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் நிலையத்தின் இணைப்பாளர் டாக்டர் அச்சுதன் மற்றும் திணைக்களத்தின் துறைப்பொறுப்பாளர் வைத்தியர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் தற்போது மக்களுக்கு முன்னெடுக்கப்பட்டுவரும் சேவைகள் அதனை பொதுமக்கள் பயன்படுத்தவேண்டிய அவசியங்கள் குறித்தும் கருத்துரைகள் வழங்கப்பட்டன.

அத்துடன் மாவட்டத்தின் சுகாதார செயற்பாடுகள் மற்றும் பொதுச்சுகாதார செயற்பாடுகள் குறித்து கருத்துகள் முன்வைக்கப்பட்டதுடன் அவற்றினை மக்கள் மயப்படுத்துவதற்காக ஊடகவியலளார்கள் முன்னெடுக்கவேண்டிய செயற்பாடுகள் குறித்தும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
இதன்போது சுகாதார துறையுடன் இணைந்து பணியாற்றும் ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் வகையில் சான்றிதழ்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
இதன்போது கருத்து தெரிவித்த பிராந்திய சுகாதார பணிப்பாளர் முரளீஸ்வரன்,
மதுபாவனை புனர்வாழ்வு நிலையம், தற்கொலை தொடர்பான விழிப்புனர்வு மையம், மனநலம் சார்ந்த தொடர்பு மையம், பாலியல் ரீதியான விழிப்புனர்வு மையம், பிச்சைக்காரர்களுக்கான் மறுவாழ்வு ஏற்பாடுகள், விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான தேவை நிலையம் என்பன அமைக்கப்பட்டுள்ளது.
கற்பினித் தாய்மாருக்கான அனீமியா பிரச்சனைக்காக வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் நடும் செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளோம். இது பொருளாதர ரீதியிலும் ஒரு நிலையை ஏற்படுத்தும் விதமாக அமையும்
பாடசாலை மாணவர்களிடையே வயதினை விட அதிக உடற்பருமன் கொண்டுள்ள விடயம் தொடர்பில் விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.
புற்றுநோய் பிரச்சனைக்கான விசேட ஏற்பாடுகள், இதற்காக ஆலய திருவிழாக்களில் பொலித்தீன் பாவனைகளைக் குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றோம். அது தொடர்பில் அதிகளவான இறுக்கத்தைக் கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.

தலசீமியா பிரச்சனை அதிகளவாக இருக்கின்றது. சுமார் 200 பிள்ளைகள் இருக்கின்றனர். ஐ.எம்.எச்.ஓ என்ற நிறுவனத்தின் ஊடாக ஆரையம்பதியில் உருவாக்கியுள்ளோம்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் ஆரையம்பதி வைத்தியசாலையின் உதவியுடன் இதனை முன்னெடுத்து வருகின்றோம். இன்னும் அதிகமானவர்களுக்கு இனந்தெரியாமல் குறித்த தலசீமியா பிரச்சனை இருக்கும் என்ற சந்தேகம் நிலவுகின்றது.
இதன் காரணமாக தற்போது பாடசாலை மாணவர்கள் ரீதியில் இரத்தப் பரிசோதனை செய்து வருகின்றோம். இதன்மூலம் கூடிய வகையில் இதனை இனம்கண்டு குறைத்துக் கொள்ள முடியும்.
இலங்கையில் தொழுநோய் வீதத்தில் மட்டக்களப்பு இரண்டு அல்லது மூன்றாவது நிலையில் உள்ளது. இதற்கான நிலையத்தினை முன்முரமாக செயற்படுத்தி வருகின்றோம். காவேரி அமைப்பு இதற்கான ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றது.

இது தவிர டெங்கு மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற விடயங்களும் எம்மால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பிலுள்ள பிரதான பாடசாலைகள் அனைத்திலும் டெங்கு நிலை அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலைமைகளை குறைக்க வேண்டும்.
டெங்கு மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் பாடசாலை ரீதியில் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். டெங்கு கட்டுப்பாடு தொடர்பில் கழகங்களின் ஒத்துழைப்புகளை நாங்கள் மிகவும் எதிர்பார்க்கின்றோம் என்று தெரிவித்தார்.

தற்கொலைகள் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டம் தற்கொலையில் இரண்டாவது நிலையில் உள்ளது. இதனை தடுக்கும் வகையிலான வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. வைத்தியசாலைகள் தோறும் மனநோய் தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அதற்கான தொலைபேசி எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் மனரீதியாக பாதிக்கப்படுபவர்கள் தமக்கான உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான அனைத்துவிதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மனரீதியான தாக்கங்கள் காரணமாக பாடசாலை இடைவிலகல்களும் அதிகரிக்கும் நிலை காணப்படுவதுடன் இளம் வயது திருமணங்களும் அதிகரிக்கும் நிலைமையும் காணப்படுகின்றன.
இவற்றினை கட்டுப்படுத்துவதற்கு பாடசாலை ரீதியாகவும் மருத்துவ சோதனைகளும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.